கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கினார்
டெல்லி, ஆக.8–
மணிப்பூர் விவகாரத்தில் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்கியது.
மணிப்பூர் விவகாரத்தில் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், மக்களவையில் இன்று மதியம் தொடங்கியது. தீர்மானத்தின் மீதான விவாதம் சரியாக பகல் 12 மணிக்குத் தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டபடி தொடங்கியது. விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல் பேச்சாளராக ராகுல் காந்தி தொடங்கி வைக்க பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். இதனையடுத்து காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது, மணிப்பூர் மக்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழைக்கப்படும் அநீதி என்றார்.
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, 4 மாத இடைவெளிக்கு பிறகு, அவை நடவடிக்கைகளில் நேற்று ராகுல்காந்தி பங்கேற்றார் . கடைசியாக ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி 2023-ல் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அதானியின் நிதி முறைகேடு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்ப நடைபெறுமா?
கேள்வி நேரத்துக்குப் பின்னர் தொடங்கிய இந்த விவாதம் மாலை 7 மணி வரை நீடிக்கும். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இதே நேரத்தில்தான் விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 10 அன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி சந்திக்கும் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் இது. இதில் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளன. பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எந்தத் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் விலகி நிற்கின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பலத்தை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு 301 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோலவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமரை அவையில் பேச வைப்பதற்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.