டெல்லி, நவ. 6–
பாரதீய ஜனதா அமைச்சரவையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் முறையில் எனக்கு திருப்தி இல்லை. பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் நினைப்பதை பற்றி தான் நான் பேசுகிறேன். ஆனால் தற்போதைய கொலிஜியம் முறையில் நீதிபதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை பரிந்துரை செய்கின்றனர். இது தவறானது என்று இந்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
சுப்பிரமணிய சாமி குற்றச்சாட்டு
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ”மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் வெளிப்படைத்தன்மையின்றி உள்ளது என்கிறார். முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையிலும், நீதிமன்றங்களில் 100க்கும் அதிகமான வழக்குகளில் வாதிட்டவர் என்ற முறையிலும் நான் ஒன்றை கூறுகிறேன்.
மோடி அமைச்சரவை வெளிப்படை தன்மையின்றி மிகவும் தெளிவற்ற நிலையில் உள்ளது என்பதை என்னால் கூற முடியும். இதனை கிரண் ரிஜிஜூ முதலில் சரிசெய்ய வேண்டும். இதனை நீங்கள் செய்யும்போது பதவி நீக்கம் செய்யப்பட்டால் என்னை குறைக்கூறக் கூடாது” என தெரிவித்துள்ளார்.