பாட்னா, டிச. 3–
பீகார் மாநிலத்தில் குர்கானி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்முறையாக நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது, பாஜகவை கடுமையாக தாக்கி பேசினர்.
நிதிஷ் குமார் பேசுகையில்,‘‘வெறுப்பு பிரச்சாரத்தை தவிர பாரதீய ஜனதாவுக்கு வேறு ஒன்றும் தெரியாது. நமது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜக மறுத்துவிட்டது. ஒருவேளை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தால், தற்போது பீகார் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும். பாஜக கூட்டணியை முறித்த பிறகு தான் தாய் அமைப்பில் இணைந்துள்ளதாக உணர்வுகள் மேலிடுகிறது.
ஊடகங்களுக்கு அழுத்தம்
எங்களது சாதனைகளை ஊடகங்கள் மக்களிடம் சொல்ல மறுக்கிறது. ஊடகங்களுக்கு அதிகாரத்தில் அழுத்தம் கொடுக்கிறார்கள். நாங்கள் இந்து, முஸ்லிம் என சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. அனைத்து மக்களுக்கும் வளர்ச்சி என்ற நோக்கில் தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டுவருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நிலையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில் அது மக்களுக்கு புரிய வரும்’’ என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசினார்.
அதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ் பேசும்போது, ‘‘2024 தேர்தலில் பாஜக தோற்க போவதை தெரிந்து அச்சப்படுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த எனது தந்தை மீது வழக்கு தொடர்ந்து, அவரது உடல்நலத்தை பாஜகவினர் சீரழித்தனர். என் அப்பா பாஜகவை பார்த்து எப்போதும் பயந்தது கிடையாது. அதே ரத்தம் தான் எனக்குள்ளும் ஓடுகிறது.
பிற்படுத்தப்பட்ட யாதவ் மக்களிடையே பாஜக வேலை செய்து வருகிறது. நாம் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். எனவே நாம் ஒன்றிணைந்து சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என தேஜஸ்வி பேசினார்.