இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயன்ற பாஜக சதி முறியடிப்பு
சிம்லா, பிப். 29–
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை, கட்சித்தாவல் தடைச்சட்டப்படி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதால், இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயன்ற பாஜகவின் சதி முறியடிக்கபட்டது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. புதிதாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு 2 பேர் போட்டியிட்டனர். பாஜகவுக்கு 25 பேர் மட்டுமே ஆதரவு உள்ள நிலையில் வேண்டுமென்றே பாஜக சார்பில், வேட்பாளர் களம் இறக்கப்பட்டார். இதில் ஒருவர் வெற்றி பெற, 35 எம்எல்ஏக்கள் ஓட்டளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் காங்கிரஸின் அபிசேக் மானு சிங்கி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால் பெரும்பான்மை இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிசேக் மனு சிங்கி தோல்வியடைந்தார். பாரதீய ஜனதா கட்சி குதிரை பேரம் நடத்தி 9 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றது.
பாஜக திட்டம் தோல்வி
இதனைத் தொடர்ந்து, இமாச்சல் பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள விக்ரமாதித்யா சிங் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். இவர் முதல்வர் பதவி மீது கண்வைத்த நிலையில் அது நடக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் விக்ரமாதித்யா சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இமாச்சல பிரதேச நிலைமையை சரிசெய்ய காங்கிரஸ் மேலிடம் 2 பொறுப்பாளர்களை நியமித்தது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹுடா ஆகியோரை நியமனம் செய்தது. அதனைத் தொடர்ந்து, விக்ரமாதித்யா சிங்கிடம் பேசியதைத் தொடர்ந்து, அவர் ராஜினாமா கடித்ததை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், கட்சி மாறி வாக்களித்த, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரை, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி, தகுதி நீக்கம் செய்து, அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்தது. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 33 எம்எல்ஏக்கள் காங்கிரசில் இருப்பதால், ஆட்சியை காங்கிரஸ் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற பாஜகவின் திட்டம் படுதோல்வியடைந்தது.