செய்திகள்

பாஜகவினருக்கு பாடம் புகட்டியுள்ள சோசியலிஸ்ட்டுகள்: அகிலேஷ் பாராட்டு

லக்னோ, ஆக. 12–

பாரதீய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்டியுள்ள நிதிஷின் துணிச்சலான முடிவை, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாராட்டி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று இருந்தது. அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரிய நிதிஷ் குமார், மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனையடுத்து ஆளுநரும் நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து அம்மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜகவினருக்கு பாடம்

இதேபோல் துணை முதலமைச்சராக ஆர்.ஜே.டி கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுக்கொண்டார். நிதீஷ் குமாரின் இந்த அணுகுமுறை எதிர்க்கட்சிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகாரில் சோசியலிஸ்ட்டுகள் பாஜகவினருக்கு பாடம் புகட்டியுள்ளனர்.

ஆகஸ்ட் புரட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஆங்கிலேயர்களிடமிருந்து பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை கற்றுள்ளது. ஆனால் அக்கட்சியின் சூழ்ச்சிகளை மக்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதே இல்லை.

நாக்பூரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றியதில்லை. ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக மூவர்ணக் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தக் கூட அக்கட்சிக்கு தெரியாது. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாஜக அவர்களின் பெரும் முதலாளிகளுக்காக மட்டுமே வேலை செய்து வருகிறது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.