மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை, ஏப். 11–
பாரதீய ஜனதாவால் எந்த பிரச்சினைக்கும் தீர்வை தர முடியாததால்தான், மதத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் வடக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், ஆளும் மகா விகாஸ் அகாடியின் கூட்டணி சார்பில், காங்கிரஸைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜாதவ் களமிறங்குகிறார். அவருக்கு ஆதரவாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேரடியாகப் பிரசாரம் செய்தார்.
வெறுப்பு பிரச்சாரம் ஏன்?
இந்தக் கூட்டத்தில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, இந்துத்துவா கொள்கைகளுக்கான ‘காப்புரிமை’ பாஜகவிடம் மட்டும் இல்லை. ராமர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால், அரசியலில் பாரதீய ஜனதா என்ன பிரச்சினையை முன்னிறுத்தி இருக்கும் என்பது எனக்கு இன்னும் கூட புரியவில்லை.
பாஜகவால் எந்த பிரச்சினையையும் எழுப்பி, அதற்கான தீர்வை தர முடியாது. இதன் காரணமாகவே அவர்கள் மதம் மற்றும் வெறுப்பு பிரசாரத்தை எப்போதும் கையில் எடுக்கின்றனர் என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி பேசியுள்ளார்.