கராச்சி, பிப். 4–
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிதி. இவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிதியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப், ஷதாப் கான் ஆகியோர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷாகீன்ஷா அப்ரிதியும் இணைந்துள்ளார்.
ஷாகீன்ஷா அப்ரிதி 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.