நாடும் நடப்பும்

பாக். எல்லையில் யுத்த நிறுத்தமா?

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நாள் முதலாய் இம்ரான்கானின் திட்டம் என்ன? என்ற கேள்விக்குறி இந்திய தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதை உணரமுடிகிறது. கிரிக்கெட் ஆட்ட காலத்தில் மிக வேகமாக பந்துகளை வீசுவதில் திறமையானவர் என்றாலும் எப்படி போடப் போகிறார்? என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆட்டக்காரர்களை எல்லாம் திணற வைத்தவர்!

அதேபோல் தான் இன்று உலகத் தலைவர்களை குழப்பத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் இம்ரான்!

உலகமே பாகிஸ்தானின் தீவிரவாத கலாச்சாரத்தையும் ராணுவ ஆட்சியாளர்களின் சதிகளையும் கண்டு அஞ்சி கொண்டிருக்கையில் இம்ரான் அதே முள்படுக்கையில் எந்த சலனமுமின்றி நடந்து காட்டி வருகிறார்.

ஒருபக்கம் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ந்து தவழ்ந்து கொண்டிருக்கிறது! அதைத்தான் அந்நாட்டு ராணுவத் தளபதிகளும் விரும்புகிறார்கள். அரசியல் தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய முற்பட்டால் தங்களது அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும். அதை விரும்பாமல் நாடு கடன்பட்டு சீனாவிடம் அடிமைப்பட்டு இருப்பதில் தங்களுக்கு லாபம் உண்டு என்பதை புரிந்து கொண்டவர்கள் அவர்கள் .

இந்தியாவின் ராணுவம் எப்போது தயார் நிலையில் இருந்தாக வேண்டிய கட்டாயத்தை நிர்ப்பந்தப்படுத்தியும் வரும் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்தை மதவெறியர்களின் துணையுடன் எல்லைப் பகுதிகளில் நடத்தி வரும் அட்டூழியங்களை கண்டு இந்திய அரசியல் தலைவர்களையும் எரிச்சல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவது ; அப்படியே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் அறிகுறிகள் தோன்றினால் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த ஏற்பாடு செய்து இருதரப்பினரிடமும் கோப நிலையை உருவாக்கி எலியும் பூனையுமாய் பார்க்க வைத்தும் வருவது ஆகியவை பல காலமாகவே நடந்தும் கொண்டிருக்கிறது.

நமது பிரதமர் மோடி பாகிஸ்தான் எல்லையில் பறந்து சென்றதுடன் நின்றுவிடாமல் அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பையும் லாகூரில் தரையிறங்கிச் சந்தித்தார். 2015–ல் அதிமுக்கிய வரலாற்று சம்பவம் அது! கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு சென்ற நிகழ்வாகும்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் மோடியும். நவாசும் பாரீஸ் மாநாட்டின் ஒரங்கத்தில் தனியாக சந்தித்து மனம் திறந்து பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது.

பிறகு இரு நாடுகளிடையே அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு நம்பிக்கை பிறந்தாலும் அடுத்தடுத்து நடந்த பல்வேறு அசம்பாவிதங்களில் இந்தியாவின் தரப்பில் பாகிஸ்தான் மீது நம்பிக்கை இல்லாத நிலை உருவாகியது.

பிறகு வந்த இம்ரான்கான் இந்திய நல்லுறவை விட பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாடுகளின் பரிந்துரையால் சீனாவிடம் தஞ்சமடைய நேர்ந்ததுடன் இந்திய எல்லையில் குறிப்பாக காஷ்மீர பிரச்சினையில் தீர்வு காண முடியாமல் திணறி வருகிறார்.

காஷ்மீரத்தில் ஏற்பட்ட சமீப மாற்றங்கள் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சறுக்கல் என்பதால் இம்ரான்கானும் பேச்சுவார்த்தைக்கு இடம் தராமல் தள்ளியே நின்று கொண்டிருக்கிறார்.

ஆனால் சமீபமாக அரபு அமீரக அதிபர்களின் அழைப்பால் இம்ரான் கான் சற்றே மனம் மாறி வருகிறார். காஷ்மீரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வந்த அவர் சற்றே மனம் மாறி பேசுவதும் இந்திய நிலைப்பாட்டை ஐ.நா.வில் ஏற்பதுமாக இருக்கிறார்.

இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு என்பதை அறிந்தவுடன் பிரதமர் மோடியும் அனுதாப செய்தியை வெளியிட்டதுடன் பூரண நலம் பெற வேண்டி அறிக்கையையும் வெளியிட்டார்.

சமீபமாக குதிரை ஏற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நம் நாட்டிற்கு வர விசா தந்தும் உள்ளது.

இதில் குடிநீர் வாரிய பேச்சுவார்த்தைகள் 2018–ல் தடைபட்டது, அது மீண்டும் தொடர இவ்வாரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டும் வருகிறது.

ஐக்கிய அமீரக நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஒரு மாதமாக துப்பாக்கி சூட்டை நிறுத்தி விட்டு அமைதியான எல்லை பகுதியாக வைத்திருப்பதாக கூறியுள்ளார்கள்.

இது நல்ல செய்திதான், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை, பாகிஸ்தான் தரப்பிலும் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் கிடையாது.

எது எப்படியோ, நமக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் பாகிஸ்தானுடனான யுத்த நிகழ்வுகள் சில வாரங்கள் அமைதியாகி இருப்பது பூரண மனமாற்றங்களுக்கான முதல்படியாக பார்த்து வருபவர்கள் முழு மன மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை தருகிறார்கள். இப்படி ஒரு மாத கால போர் நிறுத்தம் தரும் மேன்மையை பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் காணும்போது, இனியும் யுத்தம் வேண்டாம், அதனால் ஏற்படும் செலவை குறைத்து விட்டால் நமது பொருளாதாரம் மீண்டும் வெற்றி நடைபோடும் என்பதை உணர ஆரம்பித்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *