செய்திகள் போஸ்டர் செய்தி

பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

Spread the love

இஸ்லாமாபாத், மே 23

பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சர்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக விபத்து குறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கூறியதாவது:

லாகூரில் இருந்து 91 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் ‘ஏர்பஸ் ஏ320’ சர்வதேச பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் கராச்சி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானம் தரையிறங்குவதில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை இயக்கி வந்த விமானி, இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.

அருகில் உள்ள 2 விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறங்கு மாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் விமான நிலையத்தை வந்தடையும் முன்னரே அருகில் அமைந்துள்ள ஜின்னா வீட்டு வசதி குடியிருப்பின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களும் குடியிருப்பில் வசித்து வருபவர்களும் சிக்கிக் கொண்டனர்.

மீட்பு பணி

விபத்து நேரிட்டதும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் மட்டுமன்றி ராணுவத்தின் அதிவிரைவு படையினரும், சிந்து மாகாண ராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நொறுங்கி விழுந்த விமானத்தின் சில பாகங்கள் தீப்பிடித்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கடும் சிரமங்களுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.37 மணிக்கு விமான நிலையத்துடனான தொடர்பை விமானம் இழந்துவிட்டது என்று விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் கூறினார்.

விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கூறினார்.

விபத்து நிகழ்ந்த குடியிருப்பில், வீடுகள் இடிந்து விழுந்தது மட்டுமன்றி, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

விபத்து நிகழ்ந்த பகுதியில் தெருக்கள் குறுகலானதாக இருந்ததாலும், பொதுமக்கள் திரண்டதாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

2 பேர் உயிர் தப்பினர்

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ‘பேங்க் ஆப் பஞ்சாப்’ வங்கியின் தலைவர் ஜாபர் மசூத்தும் மற்றொருவரும் உயிர் தப்பினர்.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய 4 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை விரைவில் முடிக்குமாறு அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் ஜின்னா மருத்துவமனைக்கும் சிவில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *