இந்தியாவிடம் ஒப்படைப்பு
புதுடெல்லி, மே 14–
பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய போது பஞ்சாபின் பெரோஸ்பூரில், பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பூர்ணம் குமார் ஷா தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார். அவரை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற இவர், ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பூர்ணம் குமார் ஷா. இவரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, “எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்” என்று அழுதார்.
தற்போது இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தமும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இன்று காலை 10.30 மணிக்கு அட்டாரி–வாகா எல்லை வழியாக பூர்ணம் குமார் ஷாவை அழைத்து வந்து, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்படைத்ததாக எல்லையோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி கைது செய்யப்பட்ட பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்கு பிறகு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல இந்தியாவிடம் சிக்கிய பாகிஸ்தான் வீரரும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.