செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு

உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை தகவல்

லாகூர், நவ. 4–

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததில், காலில் காயம்பட்டுள்ளதாகவும் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று வெளியான மருத்துவமனை தகவலையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (வயது 70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கூறி வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் நடைபெற்ற பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அப்போது பேரணியில் இருந்த மர்ம நபர், இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட நபரை, தொண்டர்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவமனை தகவல்

இதை அடுத்து, அவரை சூழ்ந்த கட்சி நிர்வாகிகள், காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக லாகூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவரது கால்களில் குண்டு துளைத்துள்ளதாகவும், ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்து ஏதுவும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர் நிம்மதி அடைந்துள்ளனர்.

முன்னதாக, பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஆகியோர் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திகுந்தனர். அந்நாட்டு ராணுவமும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *