இஸ்லாமாபாத், பிப். 2–
பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது வாகனத்தில் இருந்து மது பாட்டிலும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஷேக் ரஷீத் அகமது போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷேக் ரஷீத் அகமது, இஸ்லாமாபாத்தில் உள்ள ஆபரா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படார். பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாலிகிளினிக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, ரஷீது கூறும்போது,
இம்ரான்கானுக்கு துணையாக நின்றேன் என்பது என்னுடைய குற்றம். 16 முறை அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால், ஒரு முறை கூட என் மீது அமைச்சகத்தில், ஊழல் செய்த குற்றச்சாட்டு என்பது கிடையாது என கூறியுள்ளார். அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அச்சம் தெரிவித்து உள்ளார்.
போலீசார் தன்னையும், மருமகன் ஷேக் ரஷீத் ஷபீக் என்பவரையும் ராவல்பிண்டி இல்லத்தில் வைத்து கைது செய்தனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, 100 முதல் 200 ஆயுதமேந்திய நபர்கள் ஏணிகளை போட்டு இல்லத்திற்குள் புகுந்தனர். அவர்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். என்னுடைய வேலைக்காரர்களையும் அடித்து, தாக்கினர். அதன்பின் போலீசார் கட்டாயப்படுத்தி தன்னை அவர்களது வாகனத்தில் வைத்து கொண்டு சென்றனர் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான இவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இம்ரான்கானை கொலை செய்ய முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு எதிராக ரஷீத் மீது சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ராவல்பிண்டி பிரிவு தலைவர் ராஜா இனாயத் உர் ரகுமான் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் ஷேக் ரஷீத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.