இஸ்லாமாபாத், ஜூலை 19–
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12 நள்ளிரவுடன் முடிவடைவதை தொடர்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதியே கலைக்கப்படும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, தற்போதைய நாடாளுமன்றத்தை கலைக்க நாட்டின் மிக முக்கிய ஆளும் கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக்கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி கட்சிகளுடனான உரிய ஆலோசனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அரசு தனது முடிவை அறிவிக்கும் என பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் ஔரங்கசீர் தெரிவித்துள்ளார்.
60 நாளில் தேர்தல்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த அரசு அமைக்கப்படும் வரை காபந்து அரசு பிரதமராக ஷெரீப் தனது கடமைகளை தொடர்வார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் நாளுக்குப் பிறகு, உடனடியாக 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைமையிலான பாகிஸ்தான் ஜனநாயக இயக்க கூட்டணி, நாடாளுமன்றத்தை கலைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.