இஸ்லாபாமாத், மே.5-
பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் இந்திய கப்பல்கள் நுழைய அந்த நாடு தடை விதித்து உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் சமீத்திய நடவடிக்கையாக, பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பொருளும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும் அந்த நாட்டு கப்பல்களுக்கும் இந்திய துறைமுகங்களில் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் நேற்று இந்திய கப்பல்களுக்கு தங்கள் நாட்டு துறைமுகங்களில் தடை விதித்து உள்ளது.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்தில் நுழைய தடை விதித்து இருப்பதாக பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்கள் துறை அமைச்சம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடல்வழி இறையாண்மை, பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் எந்த பாகிஸ்தான் துறைமுகத்தையும் அடைய அனுமதிக்கப்படாது. இதைப்போல, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் எந்த இந்திய துறைமுகத்துக்கும் செல்லாது’ என கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.