புதுடெல்லி, மே.13-
‘போர் நிறுத்தம் தற்காலிகம் தான், பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்’ என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை, பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு முதன் முறையாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
நாட்டின் பலம், ராணுவ வீரர்கள் பலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. நாம் என்ன செய்வோம் என்று உலகமே கண்டுவிட்டது. நமது ராணுவ வீரர்களுக்கும், உளவுத்துறை யினருக்கும், ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் எனது வணக்கங்கள். ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு நன்றி.
பஹல்காமில், துளியும் கருணை இல்லாமல் குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே குடும்ப தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், என்னை மனதளவில் மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, ஒட்டு மொத்த நாட்டு மக்களும், பயங்கரவாதி களுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர். பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன்.
அதன்படி இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இன்று பயங்கரவாதிகள் உணர்ந்துள்ளனர். அந்தளவுக்கு நாம் துல்லிய தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.
இத்தகைய தாக்குதலை நாம் நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிந்தூர் நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத முகாம்கள் பகாவல்பூர், முரித்கேவில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. நமது தாக்குதலால் அச்சம் அடைந்த பாகிஸ்தான், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நமது மக்கள் மீதும், பள்ளிகள், கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
நாம் பாகிஸ்தான் மீது ஏவிய ஒவ்வொரு ஏவுகணையும், டிரோன்களும் இலக்கை வெற்றிகரமாக குறி வைத்தன. அவர்களது ட்ரோன்கள் எல்லாம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உலகம் கண்டது. 3 நாட்களிலேயே இந்த போரில் இருந்து தப்பிக்கும் வழியை பாகிஸ்தான் தேடியது. டி.ஜி.எம்.ஓ., மூலம் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பாகிஸ்தான் பார்க்க வேண்டியிருக்கும். அவர்களது எதிர்கால செயல்பாடுகளை பொறுத்து, போரை நிறுத்தி வைத்திருப்பது ஆய்வு செய்யப்படும்.
மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டு வோம். எந்த விதமான அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அதை சகித்துக் கொள்ளாது. நமது ஒட்டு மொத்த படைகளும் உச்சபட்ச விழிப்பு நிலையில் உள்ளன போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் நாம் பாகிஸ்தானை தோற்கடித்து இருக்கிறோம்.
ஒட்டு மொத்த உலகமும் பாகிஸ்தானின் உண்மையான முகத்தை தற்போது பார்த்து விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களின் வலிமையான செயல்திறனை உலகம் பார்த்து விட்டது.
இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செய்திருக்கிறது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும். இல்லையெனில் பயங்கர வாதத்துக்கு பாகிஸ்தான் பலியாக நேரிடும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
![]()





