ஆர்.முத்துக்குமார்
தேர்தல் களத்தில் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது வாடிக்கை தான். அது ஜனநாயக உரிமை என்பது வாதத்திற்கு உரியது. ஒரு பிரதமர் ரகசியம் காக்க உறுதி பிரமாணம் எடுத்து இருக்கும் நிலையில்
சில சமாச்சாரங்களை வெளியிடுவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.
பிரதமரே அரசியல் பேச்சுக்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது அடுக்கலாமா? அப்படியே பொதுமக்களிடம் ஆவேசமாக பேசினால் அதில் உண்மையில் நியாயம் இருந்து, அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுத்தான செய்யும்! அதாவது உண்மை என்று தெரிந்து தண்டிக்காது இருந்ததும் குற்றம் தானே?
அப்படி ஒரு சிக்கலான குழப்பத்தை சமீபத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார உரை சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ராகுல் காந்தி மீது நேரடி தாக்குதல் பேச்சு சுட்டெரிக்கும் உண்மையா அல்லது நகைப்புக்கு உரிய நையாண்டித் தனமா? என்பதை பாரதீய ஜனதா தலைமை தான் நாட்டிற்கு விளக்கம் தர வேண்டும்.
பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டி இருப்பதாகவும் அதன் பின்னணியில் மிகப்பெரிய சதி வலையில் இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த திட்டம் அவிழ்த்து விடப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
‘இங்கே தேய்பிறையாகி விட்ட காங்கிரஸ் கட்சிக்காக பாகிஸ்தான் கவலைப்படுவது ஏன்?’ என்றும் மோடி பகிரங்கமாக கேள்வி கேட்டு இருக்கிறார்.
2008ல் மும்பைக்குள் ஊடுருவி துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்று தனது தலைமையிலான மத்திய அரசின் நல்லாட்சியின் காரணமாக நம் மண்ணில் எந்த தவறுகளையும் செய்ய முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புவதாக கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் அரசியல் தடுமாற்றங்கள் காரணமாக நிலைகுலைந்து இருக்கும் அந்நாட்டு தலைவர்கள் இந்தியாவின் சமீபத்து வளர்ச்சிகளை விரும்பாது அதை தடுக்க முட்டுகட்டைகள் போட தயாராகி உள்ளனராம்.
2047–ல் நாம் சுதந்திரம் பெற்ற நூற்றாண்டை கொண்டாடும்போது உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக உயர இருக்கிறோம். அதை தடுக்கவே நம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி எங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்த பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறார் பிரதமர் மோடி.
மேலும் காங்கிரசின் அசைக்க முடியாத ரசிகனாக பாகிஸ்தான் இருப்பதாக விவரித்த பிரதமர், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ராகுல் காந்தியை பாராட்டுவதை சுட்டிக்காட்டி இது தான் இன்றைய உண்மை என காங்கிரஸ் மீது அவதூறு பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
மேலும் நம் நாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று கூடி ஆட்சி மாற்றத்திற்கான சக்தியாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிவினைவாத பேச்சு, குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை நாட்டின் ஒற்றுமையை நிலைகுலைய வைக்கும் பரிணாமத்தில் வளர்வதாக கூறுவது பிரதமர் என்பதால் இதை வெறும் அரசியல் பிரச்சார ஆவேச பேச்சாக இருந்து விடாது.
அப்படி ஏதேனும் உண்மையான சம்பவங்கள் அவரது குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருந்து அதற்காக உரிய நடடிவக்கை எடுக்கவில்லை என்றால் பாரதீய ஜனதா எம்.பி. மீதும், அமைச்சர் மீதும் பாலியல் குற்றங்களை மல்யுத்த வீராங்கனை வெளியிட்டாரே அப்போது அதை உதாசீனப்படுத்தியது போல பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையோ?
பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் வலுவாக இருக்கும் நம் நாட்டில் எங்கள் பரிதாபத்தை பாருங்கள் என நாடே அதிரும்படி பகிரங்கமாக போராடிய போது பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் கையை பிசைந்தபடி எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர் அல்லவா?
அதுபோன்றுதான் எல்லைப்புற எதிரிகளின் நடவடிக்கைகளை கூட அரசியல் ஆதாயத்திற்காக மேடை பேச்சில் பேசும் பொருளாக மாற்றி இருப்பது பொறுப்பற்றது என யோசிக்க வைக்கிறது.