இஸ்லாமாபாத், ஜூலை 31–
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அரசியல் கட்சிக் கூட்டத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வடக்கு பாகிஸ்தானின் பாஜௌா மாவட்ட தலைநகர் கார் நகரில் ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-பஸல் (ஜெயூஐஎஃப்) கட்சியின் கூட்டம் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மாலை தற்கொலை படை பயங்கரவாதி குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினார். இதில் 44 பேர் உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவா்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலைத் தாக்குதல் என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், சம்பவ பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து குண்டுவெடிப்பின் தன்மையை அறிய ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் வலியுறுத்தல்
இத்தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், மாகாண முதல்வர் ஆசம் கான் ஆகியோரிடம் ஜெயூஐஎஃப் தலைவா் மௌலானா பஸ்லூர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலிபான்கள் எனப்படும் ‘தெஹ்ரீக்-ஏ-பாகிஸ்தான்(டிடிபி)’ என்ற பயங்கரவாத அமைப்பு, அரசுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு நவம்பரில் முறித்துக் கொண்டது.
அதன்பிறகு கைபர் பக்துன்கவா மற்றும் அதன் எல்லையில் உள்ள பலூசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரியில் பெஷாவரில் உள்ள மசூதியில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.