டெல்லி, பஞ்சாப், இமாச்சல் பிரதேசத்திலும் உணரப்பட்டது
இஸ்லாமாபாத், மார்ச் 22–
ஆப்கானிஸ்தானின் ‘இந்து குஷ்’ மலைத்தொடரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்தது என்றும். பூமிக்கு அடியில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளின் தெற்கு தென் கிழக்கு பகுதியை ஒட்டிய ஜுர்ம் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசரநிலை துறை செய்தித் தொடர்பாளர் பிலால் பைசி தெரிவித்துள்ளார். வடமேற்கு பாகிஸ்தானில் பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார். சில இடங்களில் பூகம்பத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது என்றார்.
11 பேர் பலி
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களை அந்நாட்டு அரசு முகாம்களில் தங்க வைத்திருக்கிறது. நேற்றிரவு வரை ஓரிருவர் மட்டுமே நிலநடுக்கத்தால் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை இந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சுமார் 50க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக லாகூர், இஸ்லாமாபாத் ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை மருத்துவமனைகளுக்கு அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதியாக தெரியாததால் மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக பாகிஸ்தானின் கஜானா ஏறத்தாழ முற்றிலுமாக காலியானது. தற்போது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதற்கு வெள்ள பாதிப்பு முக்கிய காரணமாகும். இதிலிருந்து தற்போது வரை மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் இப்போது மற்றொரு பேரிடர் ஏற்பட்டிருக்கிறது.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல முகாம்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். மீட்புப் பணிகளில் கவனமாக ஈடுபட வேண்டும் என்று அந்நாட்டு பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறியிருக்கிறார்.
இந்தியாவில்…
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வடமாநிலங்களில் நன்றாக உணரப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் வரை இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் இரவு முழுவதும் தங்கியுள்ளனர். இந்தியா மட்டுமல்லாது துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.