இஸ்லாமாபாத், ஜூலை 20–
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 38 லட்சமாக உள்ளது. இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.61 சதவீதம் ஆகும்.
பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை, அந்நாட்டின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 24 கோடியாகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.16 கோடி. அதாவது, 96.35 சதவீதம். கடந்த 2017-ம் ஆண்டில் பாகிஸ்தான் மக்கள்தொகை சுமார் 20 கோடியாக இருந்தது. இப்போது 4 கோடி (2.55%) அதிகரித்துள்ளது. இதே வீதத்தில் அதிகரித்தால், 2050ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானின் மக்கள்தொகை இருமடங்கு உயரும். கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 96.47 சதவீதத்தில் இருந்து 96.35 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.
பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 38 லட்சமாக உள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டில் 35 லட்சமாக இருந்தது. அதேநேரம், மொத்த மக்கள்தொகையில் ஹிந்துக்களின் சதவீதம் 1.73-ல் இருந்து 1.61 சதவீதமாக குறைந்துவிட்டது.
கடந்த 2017-ல் 26 லட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 33 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 1.27 சதவீதத்தில் இருந்து 1.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. அகமதி பிரிவினரின் எண்ணிக்கை 1.91 லட்சத்தில் இருந்து 1.62 லட்சமாக குறைந்துள்ளது. சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 16,000 -ஆகவும், பார்சி இனத்தவரின் எண்ணிக்கை 2,348-ஆகவும் உள்ளது.
பாகிஸ்தானில் ஆண்கள் 12.4 கோடியும், பெண்கள் 11.7 கோடியும் உள்ளனர். பாலின விகிதம் 1:06 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 20,331. மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் 30 வயதுக்குள்பட்டவர்கள். 80 சதவீதம் பேர் 40 வயதுக்குள்பட்டவர்கள். 67 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3.55 சதவீதமே உள்ளது. கிராமப் புறங்களைவிட நகா்ப்புறங்களில் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.