இஸ்லாமாபாத், ஆக. 30–
வடக்கு பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மைதான் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சரிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பருவமழை ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சிந்து, வடகிழக்கு/தெற்கு பலுசிஸ்தான், வடகிழக்கு–மத்திய பஞ்சாப், போடோஹர் பகுதி, இஸ்லாமாபாத், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கனமழையால் முர்ரே, கல்லியத், மன்செரா, கோஹிஸ்தான், சித்ரால், டிர், ஸ்வாட், ஷாங்லா, புனர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், பாகிஸ்தானின் கரையோரப் பகுதிகள் சிந்து கடற்கரையை ஒட்டி வடகிழக்கு அரபிக்கடலில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.