செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கப் பாடுபட்ட இம்ரானின் சகாப்தம் முடிந்ததா?


ஆர். முத்துக்குமார்


பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் 2018 முதல் மார்ச் 2022 வரை பிரதமராக பணியாற்றிக் கொண்டிருந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது.

பாகிஸ்தானின் வரலாற்றில் இம்ரானின் வருகை அந்நாட்டில் ஜனநாயகத்திற்கு புதிய பாதை அமைத்தது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தான் அந்நாட்டில் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவானது.

ஆனால் தேர்தல் களத்தில் வெற்றியை பெற அவரது கட்சி திணறினாலும் இவரது வருகை பாகிஸ்தானின் அரசியலில் புதிய வசீகர முகமாக இருந்தது.

2018ல் அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சியை பிடிக்கும் முழு பெரும்பான்மை பெற முடியாது போனதால் ராணுவ அணியின் உதவியால் எப்படியோ ஆட்சியை பிடித்து பிரதமர் பொறுப்பில் அமர்ந்தார்.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற ஆட்சி கவிழ்ந்தது.

எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த சில நாட்களில் இம்ரானும் அவரது முக்கிய சகாக்களும் காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து பல வழக்குகள் அவர் மீது சுமத்துப்பட்டும் வந்தது . அது நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டாலும் சில நாட்களுக்குப் பிறகு அவர் மீது இருந்த லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தீர்ப்புப்படி இம்ரான்கானுக்கும் முக்கிய சகாக்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது?

அடுத்த 2 நாட்களில் படு ரகசியமாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ரகசிய பாதுகாப்பு சட்டத்தை மதிக்காமல் பிரதமராக இருந்தபோது பல முக்கிய ரகசியங்களை கசிய விட்டதாக கூறி மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான் தன் தொண்டர்களுக்கு எந்த வன்முறையும் கூடாது. அமைதியாக உங்கள் எதிர்ப்பை தேர்தல் களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டு இம்மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் சின்னம் முடக்கப்பட்டுள் ளதால், இதில் இம்ரானின் பிடிஐ கட்சியால் போட்டியிட முடியவில்லை. அவரது கட்சித் தலைவர்கள் சுயேச் சைகளாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இம்ரான் கான் தற்போது அடியலா சிறையில் உள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் அவர் மீது ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக அவர் மீதும் பிடிஐ கட்சியின் துணைத் தலைவராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்த ஷா மெகமூத் குரேஷி மீதும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தற்போது இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாது.

தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் ராணுவம் தீவிர கண்காணிப்பை துவங்கி விட்டது. தடை செய்யப்பட்ட இம்ரான் கானின் கட்சியினர் தடை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யாரேனும் தேர்தலில் நின்று ஜெயித்து விடக்கூடாது என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையமும் மிக மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இறுதி பிரச்சார கட்டத்தில் பல பெரிய தலைவர்கள் தீவிரவாதத்திற்கு பலியாகியது நினைவுக்கு வரும் . இந்நிலையில் பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்க வழி கண்டவர்கள். என்ன ஆகப்போகிறார்களோ…? என்ற அச்சக் கேள்வியுடன் அந்நாட்டு மக்களும் பல உலக தலைவர்களும் அரசியல் நோக்கர்களும் நிலைமையை தீவிரமாகவே கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பார்த்து பொறாமை படும் சில அந்நிய சக்திகள் இந்த குழப்பமான கட்டத்தில் ஏதேனும் சதி வலையை அவிழ்த்து புதுக்குழப்பத்தை அரங்கேற்றி விடக் கூடாது என்பதற்காக நமது பாதுகாப்பு துறை கவனமாக செயல்பட வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *