தலையங்கம்
பாகிஸ்தானில் ஒருவழியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமர் யார்? யாருடைய கட்சிக்கு உண்மையான வெற்றி? போன்ற கேள்விகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்காதது உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு அதிர்ச்சியை தருகிறது.
பாகிஸ்தானில் உள்ள சாமானிய வாக்காளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்குமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. அக்கட்சியினரின் தேர்தல் சின்னமாக ‘கிரிக்கெட் மட்டை’யும் யாருக்கும் தரப்படவில்லை.
ஆனால் இம்ரான்கான் கட்சியின் ஆதரவாளர்கள் தாங்கள் அவரின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தி வாக்கு சேகரிக்கத் துவங்கிய நிலையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டது.
வெட்டவெளியில் தங்களது ஆட்சிக்கால சிறப்புகளையோ, வெற்றிப்பெற்றால் செய்ய இருக்கும் புரட்சிகள் பற்றியோ பேச வழியின்றி பிரச்சாரம் களையிழந்து இருந்தது.
இம்ரான்கான் மீது அபிமானம் வைத்து இருந்தவர்கள் பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆவர். அவர்கள் தேர்தல் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையாக காத்திருந்தனர்.
வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க, பாகிஸ்தான் ஜனநாயகத்தின் கரமாக இருக்கும் வாக்குரிமையால் தீய சக்திகள் அழிந்து ஜனநாயகம் பிழைத்து விடும் என்ற நம்பிக்கை பெற்றது.
ஆனால் அந்த கனவும் சிதைந்து போகும் வகையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டது, எங்கும் ராணுவத்தின் கட்டுப்பாடுகளும், காவல்துறையின் பாதுகாப்பு வளையமும் இறுகியது.
இது இன்றைய ஆளும் கட்சி, தேர்தல் ஆணைய அதிகார வர்க்கத்தின் கூட்டு சதி என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்து இருக்காது!
ராணுவ ஆட்சியாளர்களும் கூட இப்படி ஒரு நடவடிக்கையா? என அதிர்ந்து இருக்கக்கூடும்!
வாக்கு எண்ணிக்கை துவங்கிய நேரம் முதல் இம்ரான்கான் கட்சியின் ஆதரவு வேட்பாளர்கள், அவர்கள் எல்லாம் சுயேச்சையாக தேர்தலில் நின்றவர்களே பெருவாரியாக முன்னிலை வகித்தனர்.
அன்று மாலையே 71 தொகுதிகளில் வென்ற நவாஸ் ஷெரீப்பின் கட்சி தாங்கள் வென்று ஆட்சியை பிடித்து விட்டதாகவும் விரைவில் நவாஸ் மீண்டும் பிரதமராக பதவி ஏற்று விடுவார் என்று அறிவித்தனர்.
ஆனால் 91 இடங்களை வென்ற சுயேச்சைகளே மெஜாரிட்டியை பெற்றுள்ளனர், அவர்களால் கட்சியின்றி ஆட்சியை பிடிக்க முடியுமா? அவர்களது ஆதரவு கட்சி தாவல் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது! ஆகவே யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் அல்லவா?
நவாஸ் நினைத்தால் தேவைப்படும் சுயேச்சைகளின் ஆதவை தன் பாணியில் இழுத்துக் கொள்ளவும் முடியும்!
நிலைமை என்னவென்றால் குறைந்தபட்சம் 133 இடங்களை வென்றவரே ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் யாருக்கும் தனி பெரும் மெஜாரிட்டி கிடையாது.
முதல் இடத்தில் இருக்கும் சுயேச்சைகள் 91 இடங்களையும், நவாஸ் கட்சியோ 71 இடங்களையும் வென்றுள்ளது.
மேலும் மூன்றாது இடத்தில் பிலாவல் பூட்டோவின் கட்சியும், 53 இடங்களை வென்றுள்ளது. நான்காவது இடத்தில் ஜமாயத் இஸ்லாம் கட்சி 33 இடங்களை பிடித்தும் இருக்கிறது.
மேலும் 15 இடங்களுக்கான முடிவுகள் வெளிவர இருக்கும் தருவாயில் யாருக்கும் முழு மெஜாரிட்டிக்கு வழியில்லை.
சுயேச்சைகள் திரண்டு ஒரு அணியாக மாற முடியுமா? சட்டத்தில் வழி உண்டா? போன்ற சட்ட சிக்கல்களும் பல்வேறு நீதிமன்றங்களில் விவாதிக்க விண்ணப்பங்கள் குவியத் துவங்கி விட்டது.
ஜனநாயக மன்னர்கள் தங்களது கடமையை திறம்பட செய்துவிட்டனர், பாகிஸ்தான் தேர்தல் ஆணையமோ தங்களது கடமையை சரிவர செய்யவில்லை, தடுத்தது ராணுவமா? குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த அரசியல் சதிகாரர்களா?
இது தற்போது பாகிஸ்தானின் புதிய தலைவலி, எப்படியும் ராணுவம் இவர்களை தங்களது பிடியில் அடிமைப்படுத்தி செயல்பட வைத்து இருப்பார்கள் என்று புரிந்து கொண்டாலும் ஜனநாயகம் தந்த சிறு நம்பிக்கையும் அந்நாட்டு மக்களுக்கு கானல் நீராய் மாறிவிட்டது என்று உலகமே கவலைப்படுகிறது.