டெல்லி, ஜூன் 27–
பாகிஸ்தானில் சீக்கியர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
அண்டை நாடான பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் மத சிறுபான்மையினராக உள்ளனர். அங்குள்ள முன்னணி நகரமான பெஷாவரில் மன்மோகன் சிங் என்ற சீக்கிய இளைஞர் கடந்த சனிக்கிழமை மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போல கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் 2 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர்.
தூதரிடம் கண்டனம்
பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். பலர் கடைகள் வைத்து வணிக நடவடிக்கைகளை தொழிலாக கொண்டவர்கள். அண்மை காலமாக சீக்கிய சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உலகெங்கும் சீக்கிய சமூகத்தினர் குரல் எழுப்பி வருகின்றனர். புது டெல்லியிலும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அந்நாட்டு தூதரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனவும் விசாரணை அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வரும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.