ஆர். முத்துக்குமார்
திகில் மர்மக் கதைகளில் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் படிப்பது போல் பாகிஸ்தானில் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது, அரசியலில் ஜனநாயகத்திற்கு வழியே இல்லையோ? என்ற குழப்பமும் நீடிக்கிறது. அத்துடன் பாக். ராணுவம் எல்லைப்புற தீவிரவாதத்தில் மூழ்கி இருப்பதால் தேர்தல் பணிகளில் பங்கேற்க முடியாது என்றும் சமீபத்தில் கூறி விட்டது!
இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரித்தால் என்ன ஆகும்?
கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் மிகப்பெரிய மழை வெள்ளத்தில் விவசாய உற்பத்தியில் நாசமாகின. இந்த சிக்கல்களை தீர்க்க பாக். அரசு ஐஎம்எப் உதவியை நாடியது.
ஆனால் ஸ்திரமான அரசியல் நிலை இல்லாத நிலையில் அரசு யார் பிடியில்? என்ற கேள்விக்கு பதில் தெரியாததால் ஐஎம்எப் மற்றும் இதர சர்வதேச நிதியங்கள் உதவ முன் வராது தள்ளி நிற்பது ஏன்? என்று புரிகிறது.
இந்த குழப்பமான சூழ்நிலையில் சாமானுக்கு குழப்பம் ஏற்படத்தான் செய்யும். அரசியல் குழப்பங்கள் எழும்போது அவர்களது அமைதியின்மை பூகம்பமாக மாறி தீ ஜூவலையாக வெடித்து சிதறிட நாடே பற்றி எரியும் அபாயம் உண்டு.
பிரதமர் பதவியை இழந்த ஓரளவு அந்நாட்டு மக்களின் ஆதரவு பெற்ற இம்ரான் கான் மீண்டும் ஆட்சியை பிடித்து விடக்கூடாது என்று அரசியல் சதி வலை பின்னி இம்ரான் கானை கைது செய்ய உத்தரவுகளையும் நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றும் விட்டனர்.
தற்போது இம்ரான் கைது உத்தரவுகளை நிராகரித்து தலைமறைவாக இருக்கிறார். என்னை சிறைப் பிடித்து விசாரிக்க மட்டுமா? அல்லது பல அரசியல் தலைவர்களை நொடியில் தீர்த்து கட்டியது போல் என்னையும் தீர்த்த கட்ட சதியா? என்ற கேள்வி கேட்டு தனது ஆதரவாளர்களை அரணாக முன் நிறுத்தி தலைமறைவாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி இம்ரான்கான் ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையையும் பிறப்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் ஆகஸ்ட் 13க்குள் தற்போதைய ஆட்சி கலைக்கப்பட்டாக வேண்டும், அத்தேதியில் இருந்து 60 நாட்களில் தேசம் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும். நாடு தழுவிய தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அதில் முன்னதாகவே கலைக்கப்பட்டால் 90 நாட்களில் தேர்தலை நடத்திய ஆக வேண்டும் என்ற விதிமுறை அந்நாட்டில் உள்ளது.
ஆக மொத்தம் அக்டோபர் 14க்குப் பிறகு தேர்தல் நடத்த முடியாது!
மூன்று பெரிய தேசிய கட்சிகள் மும்முனை போட்டியில். இம்ரான்கானின் கட்சிக்கே பொதுமக்களின் பேராதரவு இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகிறது.
ராணுவமும், மதவாதிகளும் அப்படி மக்களின் நன்மதிப்பை பெற்ற தலைவர் ஆட்சிக்கு வர விடுவார்களா?
அது மட்டுமா? ஒரு வேளை இம்ரான் கானை கைது செய்ய ஆயத்தமாக இருக்கையில் ஏற்பட்டு வரும் கலவரங்கள் பூதாகாரமாக வெடித்து நாடே கொந்தளித்தால் சர்வதேச நிதியம் நிதி உதவியை தருமா? அப்படி தரவில்லை என்று கூறிவிட்டு, தேர்தலை நடத்தி ஸ்திரமான ஆட்சியை கொண்டு வாருங்கள் பிறகு உதவுகிறோம் என்று கூறிவிட்டால் அடுத்த 6 மாதங்களுக்கும், தேர்வு செலவுகளுக்கும் பாகிஸ்தான் தயாராக இருக்குமா?
இம்ரான் கான் தொடர்ந்து சுமத்தி வரும் குற்றச்சாட்டு: பாக.ராணுவம் தனது அரசியல் கூட்டங்களில் ரகளைகள் ஏற்பட்டு போர்க்களமாக மாற்றி விடும் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக கூறுகிறார்.
இந்நிலையில் கைதாகி விட்டால் ராணுவ தளபதிகள் நீதிமன்றத்தில் தன் மீது பொய்க் குற்றங்கள் சுமத்தி தூக்கு மேடைக்கும் அனுப்பி விடலாம் என்று குற்றம் சாட்டுகிறார்.
இம்ரான் கானுக்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சிகள், ராணுவமும் கைகோர்த்து நீதித்துறையை அவருக்கு எதிராக செயல்பட வைத்து வருவதாகவே தெரிகிறது. இவற்றையெல்லாம் இம்ரான் கான் சமாளித்து தன்நிகரில்லா தலைவராக உயர்ந்து தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றால் அவர் வரலாற்றுப் பக்கங்களில் நவீன பாகிஸ்தானின் பெரும் தலைவர் என்று வர்ணிக்கப்படுவார்.
ஆனால் முந்தைய பாக். வரலாற்றில், 1970ல் அரசியல் கட்சிகள் ராணுவ தளபதி ஜியா உல் ஹக்குடன் கைகோர்த்த அப்போதைய பிரதமர் புட்டோவை பதவியில் இருந்து துரத்தியதுடன் தூக்கிலிடப்பட்டு தீர்த்துக் கட்டப்பட்டதையும் மறந்துவிடக் கூடாது.
ராணுவமும், தற்போதைய ஆட்சியாளர்களும் வருங்கால பாகிஸ்தானின் நன்மையை கருதி ஜனநாயகம் தழைக்க, பொருளாதாரம் சீராக உரிய நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று உலகமே ஆசைப்படுகிறது.
பல காரணங்களுக்காக எதிர் முகமாக இந்தியா இருந்தாலும் அணு ஆயுதப் போர் பதட்டம் தனிய பாகிஸ்தானுடன் நல்லுறவுகளை விரும்புகிறது. கலவர பிரதேசத்தில் அணு ஆயுதங்கள் கட்டுப்பாடுகள் தீய சக்திகளிடம் சென்று விட்டால் அதன் பின் விளைவுகள் உலக வளர்ச்சிகளை அல்லவா பாதிக்கும்!