முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
புதுடெல்லி, மே.12-
பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.
அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு பீரங்கியால் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:-
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடைய வில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான இந்தியாவின் பதிலடியில் ஒரு புதிய இயல்பு நிலையை உருவாக்கி விட்டோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு அதிக விலை தரப்பட வேண்டும். பாகிஸ்தான் சில விஷயங்களில் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக்கொண்டே பயங்கர வாதத்தை அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளாது. பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய ஒரே விஷயம், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை திருப்பித் தருவது பற்றித்தான் இருக்க வேண்டும். ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் மூலம்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும்.
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் நீடிக்கும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தியே வைக்கப்பட்டு இருக்கும்.
மே 7-ந் தேதிக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்றால், பாகிஸ்தான் சுட்டால் இந்தியாவின் பதிலடி வலிமை வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவ
இயக்குனர் ஜெனரல் பேட்டி
எல்லையில் 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவங்களை விளக்கி இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய், விமானப்படை ஏர்மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
பெஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ராணுவம் தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்களை அடையாளம் கண்டு, அவற்றை துல்லியமாக தாக்கி அழித்தோம்.
பயங்கரவாதிகள்,
ராணுவத்தினர் 140 பேர் பலி
முதல் நாள் தாக்குதலிலேயே 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முட்கேரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் லஸ்கர்-–இ-–தொய்பா அமைப்பின் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப், முதாசீர் அகமது ஆகிய முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் குருத்வார உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை குறிவைத்து தாக்கினார்கள்.
இதன்பிறகே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதலை தொடங்கியது. கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் 35 முதல் 40 வீரர்களை இழந்திருப்பார்கள்.
இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகித்தது.
பாகிஸ்தானின் சக்லா, ஜகோபாத், சர்கோதா உள்ளிட்ட பகுதிகளில் இருந்த விமானப்படைத்தளங்களை தாக்கினோம். இது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
நேற்று முனதினம் நள்ளிரவுக்குப் பின் எந்த தாக்குதலும் இல்லை. இருப்பினும் எல்லைப்பகுதியில் கடற்படை கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
![]()





