செய்திகள்

பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மக்களுக்கு உதவிய இந்திய ராணுவம்

Makkal Kural Official

ஸ்ரீநகர், மே 17–

ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்.

இந்த தாக்குதல்களின்போது பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வாழ்வாதாரமாக இருந்த வீடுகள் சேதமடைந்ததால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் வலுவான வெளிப்பாடாக, இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர். அரிசி, மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வீடு வீடாக சென்று ராணுவத்தினர் வழங்கி, அவர்களின் தேவைகளையும் நேரடியாகப் பேசிக் கேட்டறிந்தனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இது குறித்து உள்ளூர் மக்கள் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கூறுகையில், எங்கள் பகுதிகள் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்புப் பணியை உறுதி செய்வதில் ராணுவம் மிக முக்கிய பங்கு வகித்தது. மேலும் அவர்கள் தற்போது எங்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்குகிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் ராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறோம் ” என்று பெருமிதத்துடன் கூறினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *