மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கம்
புதுடெல்லி, ஏப். 27–
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளன. அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் ஓயமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி, வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று 121வது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
இன்று, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் உங்களுடன் பேசும்போது, என் இதயத்தில் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பயங்கரவாத தாக்குதலால் ஒவ்வொரு இந்தியரின் ரத்தம் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களின் பதற்றத்தை காட்டுகிறது. அவர்களின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நமது எதிரிகள் விரும்பவில்லை. அமைதி திரும்ப தொடங்கிய நேரத்தில், வளர்ச்சி பொறுக்காமல் காஷ்மீர் அழிக்கப்பட வேண்டும் என்று பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்களும் விரும்புகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைக்கும்
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒரு தேசமாக நாம் வலுவான மன உறுதியை வெளிப்படுத்த வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதலுக்குப் பிறகு, நாம் என்ன செய்கிறோம் என்று உலகம் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. மொத்த நாடும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருப்பதை இந்த உலகம் பார்க்கிறது.
உலகத் தலைவர்கள் பலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர். கடிதங்கள் எழுதியுள்ளனர், செய்திகளை அனுப்பியுள்ளனர். இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அனைவரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் முழு உலகமும் நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்.2008 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
உஷார் நிலையில்
அதிகாரிகள்
இதற்கிடையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன. தாக்குதல் குறித்து “நடுநிலையான, நம்பகமான” விசாரணையில் சேர முன் வந்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து 3வது இரவாக போர்நிறுத்தத்தை மீறி, பல இடங்களில் “ஆத்திரமூட்டும்” தாக்குதலைத் தொடங்கியதால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை மோசமடைந்தது. இந்திய ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்தது. எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், பஹல்காம் பயங்கரவாத சதியுடன் தொடர்புடையவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.
கஸ்தூரி ரங்கனுக்கு
அஞ்சலி
சமீபத்தில் காலமான விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி ரங்கன், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தொலைநோக்குப் பார்வை கொண்ட யோசனைகளை அவர் முன்வைத்தார். அவருக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் நிகழ்வுக்காக நான் பெங்களூரு இஸ்ரோ மையத்துக்கு சென்றிருந்தேன்.
அப்போது எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. திட்டம் தோல்வியை தழுவியது. அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் சிரமமான காலம். ஆனால் விஞ்ஞானிகளின் பொறுமையையும், சாதிக்கத் துடிக்கும் அவர்களது ஆர்வத்தையும் நான் கண்டேன். அடுத்த சில ஆண்டுகளில், சந்திரயான்–3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கச் செய்து அதே விஞ்ஞானிகள் சாதனை படைத்ததை மொத்த உலகமும் கண்டு அதிசயம் அடைந்தது.
இந்தியா மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது. ஆதித்யா எல் ஒன் திட்டம் மூலம் சூரியனுக்கு மிக நெருக்கமாக நமது விண்கலம் சென்றது. இன்றைய உலகில் மிகவும் குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளித் திட்டம் என்பது இந்தியாவின் திட்டம் தான். உலகின் பல நாடுகள் விண்வெளித் திட்டங்களுக்கும் செயற்கை கோள்களுக்கும் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றன.
அன்று பட்ட கஷ்டங்கள்
விண்வெளித் திட்டம் தொடங்கிய காலத்தில், தற்போது இருப்பதைப் போன்ற நவீன வசதிகள் எதுவும் நமது விஞ்ஞானிகளுக்கு இல்லை; தொழில் நுட்பமும் அப்போது நம்மிடம் இல்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் இருந்தது. நமது விஞ்ஞானிகள், ராக்கெட் உபகரணங்களை மாட்டு வண்டியிலும், சைக்கிள்களிலும் கொண்டு சென்ற அந்த படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு விண்வெளி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்று 325 விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
ககன்யான், ஸ்பேடக்ஸ், சந்திரயான் 4 ஆகிய முக்கிய திட்டங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், மார்ஸ் லேண்டர் மிஷன் ஆகிய திட்டங்களிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
மியான்மர் நாட்டிற்கு
உதவி
சமீபத்தில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். அந்த நாட்டுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்திய ராணுவம் ஆபரேஷன் பிரம்மா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. விமானப்படை விமானங்கள் முதல் கடற்படை கப்பல்கள் வரை மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஒரு நடமாடும் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. சேதமடைந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், கட்டமைப்புகளை சீர் செய்ய பொறியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். போர்வைகள், கூடாரங்கள், மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.