பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், ஏப். 26–
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தாகுதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், சதித் திட்டம் தீட்டியவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். எந்தவொரு பயங்கரவாதியும் தப்ப முடியாது. பூமியின் கடைசிவரை அவர்களை துரத்துவோம். பயங்கரவாதிகளிடம் மீதமிருக்கும் நிலத்தையும் அழிக்கும் நேரம் வந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க உளவுத்துறை தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:– “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கண்டனம்
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:– பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும். நான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் என்றார்.
ஏற்கனவே பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ”கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.