திருப்பூர், பிப். 6–
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி இன்று காலை 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், ஊத்துக்குளி அடுத்துள்ள செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல பஸ் முயன்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஒருசிலரின் கை, கால்கள் துண்டாகியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் ஈரோடு நந்தா கல்லூரியைச் சேர்ந்த பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.