புதிய எதிர்காலத்தை நோக்கி இந்தியா அடியெடுத்து வைக்கிறது பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி, செப். 19–
புதிய எதிர்காலத்தை நோக்கி இந்தியா அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்றம் இன்று முதல் செயல்படத் தொடங்க உள்ளது. முன்னதாக இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், பழைய நாடாளுமன்றம் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.
அவர் மேலும் பேசியதாவது:–
விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை துவங்கியுள்ளோம். புதிய இந்தியா, இன்றைக்கு புதிய நம்பிக்கை மற்றும் புதிய உத்வேகத்துடன் இருக்கிறது.
புதிய எதிர்காலத்தை நோக்கி இந்தியா அடியெடுத்து வைக்கிறது. இதன் தொடக்கமாக நாம் இன்று புதிய பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்; அதை அடைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் நாம் புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்வோம். எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியல் பலன்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதில் நாம் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அறிவும் புதுமையும்தான் தேவை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1000 ஆண்டுகளாக பார்க்காத வகையில் இந்தியா தற்போது திகழ்கிறது. இந்த நேரத்தில் நாம் வசித்து வருவது அதிர்ஷ்டம். நாம் மேற்கொள்ளும் அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இந்திய அபிலாஷைகளுக்கு முன்னுரிமையாக இருக்கும். இந்தியா பெரிய லட்சியங்களை நோக்கி நகர வேண்டும். இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
இளைஞர்கள் சக்தி
இளைஞர்களின் சக்திதான் புதிய இந்தியாவை வடிவமைக்கும். நம் இளைஞர்களின் திறமைக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. சந்திரயான்–3 வெற்றிக்கு பின் விண்வெளி ஆராய்ச்சி துறை புதிய உத்வேகம் கண்டுள்ளது. நமது இளைஞர்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது.
இந்த மைய மண்டபத்தில் பல நினைவுகள் சூழ்ந்துள்ளன. நமது அரசியலமைப்பு சட்டம் இங்குதான் வடிவமைக்கப்பட்டது. 1952-ல் இருந்து 41 நாட்டின் தலைவர்கள் இங்கு நம்முடைய எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர். நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதில் இந்த பாராளுமன்ற கட்டிடம் சாட்சியாக இருந்துள்ளது. இரு அவைகளிலும் சுமார் 4000 சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் பல்வேறு தரப்பினருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் இஸ்லாமிய தாய்மார்களும் சகோதரிகளும் தங்களுக்கான நீதியை பெற்றார்கள். அதற்கான சட்டம் இங்கு தான் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை நாம் ஒருமனதாகக் கொண்டு வந்து அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தோம். சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்தது நமக்கான பெருமிதம். திருநங்கைகளுக்கு நீதி வழங்கி இருக்கிறது. அதன்மூலம் அவர்கள் கண்ணியமான முறையில் கல்வி கற்கவும், வேலைவாய்ப்பைப் பெறவும், சுகாதாரத்தைப் பெறவும் முடிந்திருக்கிறது.
ஜனாதிபதிகள் 86 முறை இந்த மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர். 1947ல் அதிகார பகிர்வும் இதே மண்டபத்தில் தான் நடந்தது.
அமிர்த காலத்தின் 25 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. தற்சார்பு இந்தியாவை முதலில் நாம் அடைய வேண்டும். இது காலத்தின் தேவை. இது அனைவரின் கடமை.
உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் 3வது இடத்தை எட்டிப்பிடிக்கும்; அதுதான் எங்கள் குறிக்கோள்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதையும் செய்ய நெஞ்சில் துணிவு வேண்டும். இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. நமது பல்கலைக்கழகங்கள் உலகளவில் சிறந்த இடங்களில் உள்ளன. பல மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன.
உலக அரங்கில் செவிலியர்களின் சேவை அதிகம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் 150 புதிய நர்சிங் கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் இந்தியா மிளிர்கிறது. நமது தடகள வீரர்கள் இந்தியாவிற்கு மகுடத்தை பெற்றுத்தந்துள்ளனர்.
உலக நாடுகளின் நண்பனாக இந்தியா திகழ்கிறது. நம் நாட்டை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. நாம் புதிய பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளோம். அதேநேரத்தில், இந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் கவுரவம் ஒருபோதும் குறையக்கூடாது.
பழைய பாராளுமன்றம் இனி ‘அரசியல் சாசன மாளிகை’ என அழைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய பாராளுமன்ற கட்டடம், ‘இந்திய பாராளுமன்ற மாளிகை’யாக அறிவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.