சிறுகதை

பழைய நோட்டு – ராஜா செல்லமுத்து

மணி சிக்கனமானவர். எதையும் யோசித்து செலவு செய்யும் மனப்பான்மை உடையவர்.

அதற்காக பணத்தை தனியாக பதுக்கி வைத்துக் கொண்டு தேவையான விஷயங்களுக்கு செலவு செய்யாமல் இருப்பவர் அல்ல .

ஒரு நாள் பேருந்தில் ஏறி தன் மேல் பாக்கெட்டில் இருந்த ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நடத்துனரிடம் டிக்கெட் வாங்கக் கொடுத்தார் .

அந்தப் பத்து ரூபாயை மேலும் கீழும் பார்த்த நடத்துனர்

சார் இந்த நோட்டு போகாது. வேற நோட்டு குடுங்க என்றார்

ஏன் சார் இந்த ரோட்டுக்கு என்ன ஆச்சு? என்று கேட்டார் மணி

நாேட்டு ரொம்ப டேமேஜாக இருக்கு. கிழிஞ்சிரும் போல தெரியுது .அதனால வேற பணம் குடுங்க என்றார் நடத்துனர்

ஏங்க இந்த நோட்ட நான் அச்சு அடிச்சுட்டா வந்துருக்கேன். போன பஸ்ல இத கொடுத்தாங்க. அடுத்து உங்க பஸ்ல ஏறி இருக்கேன். நீங்க கொடுக்கும்போது நாங்க எதுவுமே பார்க்காம வாங்கி பாக்கெட்ல வச்சுறோம். ஆனா நாங்க திருப்பி கொடுத்தா அது 1008 தடவை திருப்பிப் பார்த்துட்டு செல்லாதுங்கிறீங்க என்று கொஞ்சம் முறைப்பாக பேசினார் மணி.

இல்ல சார் இந்த நோட்டு போகாது என்று வாக்குவாதம் செய்தார் நடத்துனர். பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் இரண்டு பேருக்குமான வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தார்கள் .

மணி பிடிவாதமாக என்னிடம் வேறு பணமில்லை. இந்த பணத்திற்கு டிக்கெட் போக மீதி கொடுங்கள் என்றார்.

மணி செல்ல வேண்டிய இடத்திற்கு ஏழு ரூபாய் தான் பயணக் கட்டணம் மீதம் 3 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நினைத்த அந்த நடத்துனர் விடாப்பிடியாக இந்த நோட்டு போகாது. நீங்கள் வேனும்னா அடுத்த ஸ்டாப்பில் எறங்கிக்கங்க என்றார்.

இதைக் கேட்ட மணிக்கு கோபம் வந்தது.

என்ன சார் ஏன் இப்படி இருக்கீங்க? இது என்னுடைய தப்பில்லையே? பணம் பழசாகிறதும் டேமேஜ் ஆகுறதும் என் கையில் இல்ல. எல்லாம் மக்கள் கையில சிக்கி சின்னாபின்னமாகி அப்புறம்தான் ஒவ்வொரு மனுஷங்க கையிலயும் புழங்குது .

இத என்னமோ நான் அச்சு அடிச்சு நான் பிரிண்ட் பண்ணி கொண்டு வர்றது மாதிரி என்ன குறை சொல்றீங்க? நீங்க குற்றம் சொல்ல வேண்டியது மக்களை. இந்த சமூகத்தை அத விட்டுட்டு இதவேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்? என்று மணி சொன்னபோது

கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத அந்த நடத்துனர் விசில் எடுத்து மணியை பாதி ரோட்டில் இறக்கி விட்டார்.

அந்தப் பழைய நோட்டை கையில் வாங்கிக் கொண்ட மணி அடுத்த பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று எதிர்வரும் இன்னொரு பேருந்தில் ஏறினார்

அந்தப் பேருந்தில் ஏறியதும் அதே பழைய நோட்டை கொடுத்தார் அந்த பேருந்து நடத்துனர்

இந்த நோட்டு போகாது சார். வேற நோட்டு கொடுங்க என்றார்

ஏங்க இது நல்ல நோட்டு தானே? இதுக்கு என்ன வந்துருச்சு? என்று மணி சொன்னபோது

இல்ல இது ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு .கிழிஞ்சு போறது மாதிரி இருக்கு .அதனால வேற நோட்டு குடுங்க என்று அந்த நடத்துனர் கேட்டபோது நடத்துனருக்கும் மணிக்கும் விவாதம் ஏற்பட்டது .

சார் நீங்க அரசாங்கத்துல தான வேலைதான பாக்குறீங்க. டெய்லி கலெக்சன் கவர்மெண்ட்க்கு தான கட்டுறீங்க. ஏன் இந்த நோட்டை அங்க கட்ட வேண்டியது தானே? என்று மணி சொன்ன போது

அதை நீங்க சொல்லாதீங்க .பழைய நோட்ட மாத்துறக்கு பேங்க் இருக்கு . அங்க போய் குடுங்க என்றார் நடத்துனர்.

ஹலோ இந்த நோட்ட நான் அச்சடித்து கொண்டு வரலங்க. .ஒரு பஸ்ல கொடுத்தது தான் நான் கொடுக்கிறேன் என்று அவரிடமும் தன் நியாயத்தை சொன்னார் மணி.

அந்த நியாயத்தை கேட்க தயார் இல்லாத அந்த நடத்துனர் போன பேருந்தில் இருந்த நடத்துனர் என்ன செய்தாரோ அதே வேலையை செய்து மணியை நடுரோட்டில் இறக்கி விட்டார்.

அழுக்கு படிந்த கிழிந்து போகும் நிலையில் உள்ள அந்த பழைய நோட்டை கையில் வாங்கிய மணி அடுத்த பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

என்ன இது இந்த நோட்டை ஏன் வேணாம்னு சொல்றாங்க. நல்லா தானே இருக்கு என்று கலங்கியபடியே கையில் இருந்த பத்து ரூபாய் நோட்டை பிரித்துப் பார்த்தார் மணி .

அந்த நோட்டில் பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார் காந்தி. அப்போது மணி செல்லும் வழித்தடத்திற்கு அடுத்த பேருந்து வந்து கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *