செய்திகள்

பழைய நாணயத்தை தந்தால் அதிக பணம் தருவதாக மோசடி: சேலத்தில் 5 பேர் கைது

Makkal Kural Official

சேலம், செப். 18–

பழைய நாணயத்தைத் தந்தால் அதிக பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 5 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, முகநூலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த பழனிசாமி அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், பழனிசாமியிடம் `மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படம் பொறிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆண்டில் வெளியான ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் இருக்கிறதா?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் அத்தகைய நாணயங்களாக ஐந்து ரூபாய் நாணயங்கள் ஏழும், இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிறகு அந்த நாணயங்களைப் படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்க மர்ம நபர் கூறியுள்ளார்.

அதையடுத்து தன்னிடம் இருக்கும் பழைய நாணயங்களை படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பழனிசாமியை 2 பெண்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள், “இந்த நாணயங்களை 36 லட்சத்திற்கு விற்பனை செய்யலாம், அந்த அளவிற்கு மதிப்புள்ளது. அதனால் நாங்களே 36 லட்சத்திற்கு வாங்கிக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.

பணம் மோசடி

மேலும், “இவை அனைத்தும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் என்பதால், பதிவுக் கட்டணம், தர பரிசோதனைக் கட்டணம், அரசுக்கான வரி கட்டணம் என பல வகையில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. அந்தப் பணத்தை தந்தால் ரூ.36 லட்சத்தை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவோம்” என்று பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய பழனிசாமி, தனது வங்கிக் கணக்கில் இருந்து சிறிது சிறிதாக 22 தவணைகளில் 3,82,600 ரூபாயை அவர்கள் தெரிவித்த 7 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர்கள், இன்னும் கூடுதலாகப் பணம் வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த பழனிசாமி, தனக்கு 36 லட்சம் வேண்டாம்… தான் செலுத்திய 3.82 லட்சத்தை மட்டும் திரும்ப தாருங்கள் எனக் கூறியுள்ளார். அத்துடன் அந்த இணைப்பை துண்டித்துக் கொண்டவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.

இதையடுத்து மோசடி பற்றி சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் பழனிசாமி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பழைய நாணயத்தை அதிக விலைக்கு வாங்குவதாகக் கூறி 3.82 லட்சம் மோசடி செய்தது சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள பரணம்பட்டியைச் சேர்ந்த திலீப், அவரது மனைவி செவேரியா பானு, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியைச் சேர்ந்த ஷெர்ஷகன், ஓமலூர் கண்ணனூரைச் சேர்ந்த முகமது இம்ரான் அவரது மனைவி அக்ஷயா பானு ஆகியோர் என தெரியவந்து, 5 பேரையும் சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பழைய நாணயத்தை அதிக விலைக்கு வாங்குவதாகக் கூறி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் 5 பேரும் அரியானா மாநிலத்தில், மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக பயிற்சி பெற்றுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *