ஷிண்டே, அஜித் பவார் கட்சிகள் அதிருப்தி
மும்பை, ஜூன் 11–
பழைய நண்பர்களை அலட்சியத்துடன் பாஜக நடத்துகிறது என்று ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித்பவார் கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது.
2 நாள்களுக்கு முன்பு பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 7 எம்.பி.க்களை கொண்ட சிவசேனா (ஷிண்டே) தரப்புக்கு ஒரு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா ஷிண்டே பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்க் பர்னே அளித்துள்ள பேட்டியில், ”எங்களது கட்சியை விட குறைவான எம்.பி.க்களை கொண்ட கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 உறுப்பினர்களை கொண்ட மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, 5 எம்.பி.க்களை கொண்ட சிராக் பஸ்வானுக்கு கேபினட் அந்தஸ்து பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சிவசேனாவிற்கு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுத்து அநீதி இழைத்துள்ளனர். அதுவும் சிறிய கட்சிகளெல்லாம் பதவியேற்ற பிறகு 35வது நபராக பதவியேற்க வைத்துள்ளனர்.
2 கட்சிகள் அதிருப்தி
பழைய நண்பர்கள் எந்த சூழ்நிலையிலும் கூட்டணியில் இருப்பார்கள் என்று கருதி பா.ஜ.க தனது பழைய நண்பர்களை மிகவும் அலட்சியமாக நடத்துகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.கவை விட நாங்கள் சிறப்பாகத்தான் வெற்றி பெற்றோம். நாங்கள் 15 தொகுதியில் போட்டியிட்டு 7 தொகுதியில் வெற்றி பெற்றோம். ஆனால் பா.ஜ.க 28 தொகுதியில் போட்டியிட்டு வெறும் 9 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அதனை தேசியவாத காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.
இது தொடர்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.அன்னா பன்சோடே கூறுகையில், ”எங்களது கட்சி உறுப்பினர் அமைச்சரவையில் இல்லாமல் இருப்பதால் கட்சினர் அதிருப்தியில் இருக்கின்றனர். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்”என்றார்.