செய்திகள்

பழைய நகைகளை பாதி விலைக்கு வாங்கித் தருவதாக மோசடி: டெல்லி ஆசாமி, இளம்பெண்

சென்னை, மே, 29–

பழைய நகைகளை பாதி விலைக்கு வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட டெல்லி ஆசாமி, இளம்பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தி.நகரில் உள்ள ஜிஆர்டி தங்கமாளிகை நிறுவனத்தின் மேலாளர் பிரபாகரன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 25ம் தேதியன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில், எங்கள் நிறுவன பொதுமேலாளர் எஸ்ஆர்பிஆர் குமார் என்பவருக்கு (அவர் ஜிஆர்டி மேலாளர் என்பது தெரியாமல்) கடந்த வாரம் கோவையில் இருந்து குமார் என்ற நபர் தொலைபேசியில் பேசினார். டில்லியைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவர் ஜிஆர்டி நகைக்கடையில் விற்க முடியாத நகைகளை, பாதி விலைக்கு வாங்கிக் கொள்வார். அவரைத் தொடர்பு கொண்டால் நகைகளை விற்றுத்தருவார் எனவும் கூறினார்.

இதனால் அந்த நபர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜிஆர்டி நிறுவனத்தின் பெயரில் அவர்கள் மோசடி செய்யவிருப்பது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தோம். பழைய நகை வாங்குபவர்கள் போல கடந்த 22ம் தேதி ஸ்ரீகிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு ஸ்ரீகிருஷ்ணா தனக்கு ஜிஆர்டி நிறுவனத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அட்ஷயதிரிதியின் போது விற்க முடியாத நகைகள் 1,000 கிராம் தங்கம் தன்னிடம் இருப்பதாகவும், அதன் உண்மையான விலை ரூ. 42 லட்சம் என்றும் அதனை ரூபாய் ரூ. 24 லட்சத்திற்கு வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். அந்த 24 லட்சம் ரூபாயை மூன்று தவணைகளாக செலுத்தினால் இந்த மாத கடைசிக்குள் 1,000 கிராம் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதனால் ஸ்ரீகிருஷ்ணா கூறியது போல முதல் தவணையாக ரூபாய் 8 லட்சத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தச் சம்மதிப்பதாக தெரிவித்தோம். உடனே ஸ்ரீகிருஷ்ணா வங்கிக் கணக்கு எண்ணை எங்களிடம் தெரிவித்து அதில் ரூ. 8 லட்சம் டெபாசிட் செய்ய சொன்னார். பணம் போட்ட பிறகு வங்கியின் சல்லானை வாட்ஸ்ஆப்பில் அனுப்பும்படியும் கூறினார். அதன்படியே நாங்களும் செய்தோம்.

அதே சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணா எங்களுடைய தாம்பரம் கிளை மேலாளார் குருமூர்த்தியை தொடர்பு கொண்டு, ‘உங்கள் வங்கி கணக்கில் ரூ. 8 லட்சம் டெபாசிட் செய்துள்ளோம். அதற்கான சலானை வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறேன்’ என்று கூறி நாங்கள் அனுப்பிய வங்கி சலானையே குருமூர்த்திக்கு அனுப்பினார். அதற்கான பழைய நகைகளை ராஜலட்சுமி என்பவர் வந்து வாங்கிக் கொள்வார் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த 24ம் தேதியன்று காலை 10.30மணிக்கு ராஜலட்சுமி இரண்டு பேருடன் கடைக்கு வந்தார். பிரச்சினை வந்து விடும் என்பதால் அவர் கேட்ட நகைகளை தருவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி மறுநாள் வரச்சொன்னோம்.

அதன்படி மறுநாள் 25ம் தேதி காலை 11.30 மணிக்கு ராஜலட்சுமி மட்டும் வந்தார். அவரைப் போலீசுக்கு தகவல் சொல்லி பிடித்து கொடுக்க முயன்றோம். ஆனால் அதற்குள் தப்பியோடி விட்டார். அவர் மீதும் டில்லி மோசடி நபர் ஸ்ரீகிருஷ்ணா மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக புனித தாமஸ்மலை துணைக்கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் தாம்பரம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜிஆர்டி நகைக்கடையில் மோசடி செய்ய முயன்ற ஸ்ரீகிருஷ்ணா பிரபல மோசடி ஆசாமி என்பதும், பரங்கிமலையில் கார் வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதும், பல முறை அவர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுவந்து தற்போது டில்லியில் செட்டிலானதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பழைய நகையை வாங்க வருவது போல நகைக்கடை ஊழியர்களை வைத்துப் பேசி அவரை சென்னைக்கு வரவழைத்து ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ராஜலட்சுமி இருவரையும் கைது செய்தனர். இருவரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீகிருஷ்ணா சுமார் 50க்கும் மேற்பட்டவர்களிடம் பாதி விலைக்கு நகை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *