மனைவி அகிலாவைக் கண்டித்தான் கோகுல்.
” நீ என்ன ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடுற? லோகிப்புக்கு கீழே சாரி கட்டுற? பேஸ்புக்ல இருக்க. இன்ஸ்டாகிராம்ல இருக்குற .எப்ப பாத்தாலும் யாருக்காவது போன் பண்ணிட்டே இருக்க. இதெல்லாம் தப்பு . ஒரு குடும்பப் பொண்ணு செய்ற வேலையா இது? அதுவும் எப்பவுமே புரொஃபைல் போட்டோ ரொம்ப அழகா வச்சுக்கிற . நீ இன்னும் குமரின்னு நினைப்பா? நீ எனக்கு பொண்டாட்டி ;அத நெனச்சுக்க. அத விட்டுட்டு இப்பதான் யாரையோ லவ் பண்ற மாதிரியே உன்னுடைய ஸ்டேட்டஸ் போட்டோ எல்லாம் வச்சிட்டு இருக்க”, என்று அகிலாவைத் திட்டினான் கோகுல்.
” ஏங்க அழகா இருக்க கூடாதா ? அது தப்பா? “
” அழகா இருக்கலாம். அது தப்பு இல்ல .ஆனா உன்னுடைய பேஸ்புக்ல நிறைய ஆண் நண்பர்கள் இருக்காங்க. நீ அவங்களுக்கு நிறைய பதில் சொல்லிட்டு இருக்க. இது தப்பில்லையா? என்று கோகுல் எகிற .
“இதுல என்ன தப்பு இருக்கு. பெண்கள் ஆண்கள் கூட பழகக் கூடாதா என்ன? உங்களுக்கும் தான் பேஸ்புக்ல நிறைய பெண்கள் இருக்காங்க .அத நான் கேட்கிறேனா? நீங்க யார் யார் கூடயோ மணி கணக்கா பேசிட்டு இருக்கீங்க? அத என்கிட்ட சொல்றீங்களா என்ன?” என்று அகிலா எகிற ,இருவருக்கும் சண்டை மூண்டது.
“இப்ப நீ என்ன சொல்ற. நான் சொல்றத செய்ய முடியுமா, முடியாதா ? “
என்று கோகுல் அதட்ட, வேறு வழியின்றி தன்னுடைய உருவத்தையும் சமூக வலைதளத்தையும் மாற்றினாள் அகிலா .
மறுநாள் அவள் அடியோடு மாறிப்போனதை நினைத்து கோகுலுக்கு அப்படி ஒரு திருப்தி. பரம சந்தோஷம். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் .இவள் நமக்கான அடிமை. நாம் சொல்வதை எல்லாம் கண்டிப்பாகக் கேட்பாள். அவன் மனதிற்குள் மகிழ்ச்சி மடை திறந்த வெள்ளமாய் உருண்டது.
அன்று இரவு. நீண்ட நேரம் சமூக வலைதளத்தில் இருந்தான் கோகுல். திரும்பிப் படுத்திருந்த அகிலா பட்டென விழித்தாள்.
“நீங்க மட்டும் ஏன் இவ்வளவு நேரம் பேஸ்புக்ல இருக்கீங்க ? இது தப்பு இல்லையா?
கோபமாய் கேட்டாள் அகிலா
“அது என்னுடைய பிரைவேசி .நான் ஆம்பள . அத நீ கேக்கக் கூடாது ? “
என்று தன்னை மார்தட்டிக் கொண்டான், கோகுல். நடுநிசியில் கோகுல் சன்னமாகப் பேசுவது தெரிந்தது.
” யார் கூட பேசிட்டு இருக்கீங்க? என்று அரைத் தூக்கத்தில் கேட்டாள், அகிலா
“என்னுடைய பெஸ்ட் பிரண்ட் “
“பெஸ்ட் பிரண்ட்ன்னா .ஆணா? பெண்ணா?”
என்று அகிலா கேட்க ,அதற்கு பதில் சொல்வதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்ட கோகுல்
” பெண் ” என்றான். அதுவரை அப்படி இப்படியுமாகத் தூங்கிக் கொண்டிருந்த அகிலாவிற்கு இப்போது முழுவதுமாக விழிப்பு வந்துவிட்டது .
“என்னது பெண்ணா ?படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
” ஆமா தெய்வீக காதல். என்ன பண்றது ? உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் . ஆனா என்னால அந்த காதல மறக்க முடியல”
என்று நெக்குருகிப் பேசினான் கோகுல்.
“ஓ…. இப்படியும் ஒன்னு இருக்கா?
சிறிது நேரம் இடைவெளிவிட்ட அகிலா
” எனக்கும் ஒரு காதல் இருந்தது தெரியுமா? என்ன உங்கள கல்யாணம் பண்ணச் சொல்லிட்டாங்க. அதில இருந்து அத நான் மறந்திட்டேன். ஆனா, நீங்க என்ன கல்யாணம் பண்ணிட்டு, மறுபடியும் இன்னொரு பொண்ண நினைச்சுட்டு இருக்குறது தப்பான விஷயம் ” என்றாள் அகிலா.
” ஏன் இதுல என்ன தப்பு?” என்று வாதிட்டான் கோகுல் .
“நான் பண்ணா தப்பு. நீங்க பண்ணா தப்பு இல்லையா?” என்று அந்த நடுநிசியில் இருவருக்கும் சண்டை வளர
” ஆமா தப்புதான். ஒரு ஆண் தன்னுடைய காதலை சொல்லலாம் ஒரு பெண் சொல்ல கூடாது ? ” என்று கோகுல் கத்த
“யார் சொன்னா? எங்களுக்கும் ரத்தம், சதை, உடம்பு, உணர்ச்சி, காமம், குரோதம் எல்லாமே இருக்கு. உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் இருக்கா ?”
என்று வீடு அதிரக் கத்தினாள் அகிலா. இருவருக்குமான சண்டை கடைசியில் கைகலப்பில் முடிந்தது.
இரவு விடிந்தது.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை; அவரவர் வாழ்க்கைக்கான பணிகளுக்குச் சென்றார்கள். மறுபடியும் அதே இரவு. அவள் இருந்த கோலத்தைப் பார்த்த கோகுலுக்கு என்னவோ போலானது .
“என்ன இவ ,மறுபடியும் லோகிப்புக்கு கீழே சேலை கட்டியிருக்கா? ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு இருக்கா? கூந்தலத் தூக்கி முடிஞ்சு இருக்கா? சமூக வலைதளங்கள்ல திரும்பவும் வந்துட்டா. இது தப்பாச்சே கோகுல் திமிறினான்.
“என்ன, மறுபடியும் அதே தப்ப செய்ய ஆரம்பிச்சிட்டியா?” என்று கோகுல் கேட்க
“உங்களுக்கு மட்டும் தான் காதல் இருக்குமா ?அதை நீங்க விடுறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறீங்க. அது போல என் காதல விடுறதுக்கு நான் ரொம்ப சிரமப்படுறேன். உங்களுடைய காதல் மட்டும் தெய்வீகம். என்னுடைய காதல் சாதாரணமா ?”
என்று அகிலா சொல்ல இவருக்கும் வாதம் விவாதமானது.
” இவளை என்ன செய்றது? குழம்பினான் காேகுல்.
வரும் இரவுகள் எல்லாம் நரகமாக இருந்தன. நிம்மதி விலகி நின்றது.
” உண்மையிலே உனக்கு முன்னால ஒரு காதல் இருந்ததா அகிலா ?” என்று அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை ஒரு நடு ராத்திரியில் அவளை எழுப்பிக் கேட்டான் கோகுல். அவள் பதில் பேசாமல் தலையை மட்டுமே ஆட்டினாள்.
அதிலிருந்து கோகுல் நினைத்ததற்கு மாறாக எதிரும் புதிருமான உடையிலும் நடையிலும் பவனி வந்தாள் அகிலா.
பழைய காதலை மறந்து அகிலாவைக் கண்காணிப்பதிலேயே குறியாக இருந்தான் கோகுல்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் அகிலா . அவன் காதலைச் சொன்னால் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். சகித்துக் கொள்ள வேண்டும். நம் காதல், காதலனைச் சொன்னால் இவ்வளவு கஷ்டப்படுகிறானே கோகுல். ? இருக்கட்டும் .இருக்கட்டும். இன்னும் கோகுல் முழுவதுமாக மாறட்டும். அதன் பிறகு உண்மையைச் சொல்லலாம்”
என்று தான் உருவாக்கிய கற்பனைக் காதல், காதலனைக் கட்டிக் காத்தாள் அகிலா.