அறிவியல் அறிவோம்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை அச்சுப் பிறழாமல் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 29 வயது ராகேஷ் பாபு.
மரம் வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிறந்த குட்டி மோட்டார் பைக்கை உருவாக்கி அனைவரது கவனத்தையும் இவர் ஈர்த்துள்ளார். 2 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவும் 35 சிசி இன்ஜின் திறனுடனும் இந்தக் குட்டி பைக்கை உருவாக்கியுள்ளார். இந்த பைக்கின் தோற்றமும் எழுப்பும் ஒலியும் வழக்கமான பைக்கைப் போன்றே உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் தொலைவு வரை இயங்கும் வகையில் இந்த பைக்கை ராகேஷ் வடிவமைத்துள்ளார்.
இதேபோன்று மின்சாரத்தால் இயங்கும் குட்டி ஜீப்பையும் ராகேஷ் உருவாக்கியுள்ளார். இதில் 2 குழந்தைகள் பயணிக்கலாம். இதற்கு முன்பு, பைக் எந்திரத்தைப் பயன்படுத்திக் குட்டி ஃபோக்ஸ்வாகன் காரையும் உருவாக்கினார்.
வாகனங்களின் இன்ஜினை மாற்றியமைப்பது, பைக்கின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றியமைப்பது மற்றும் வாகனங்களில் உள்ளே மாற்றியமைப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். செர்தலாவில் உள்ள ஆட்டோகாஸ்ட் என்ற நிறுவனத்தில் ராகேஷ் பணியாற்றி வருகிறார்.
ஐடிஐ படித்து முடித்ததுமே வாகனங்களை உருவாக்கும் பணியில் இறங்கினார். வழக்கமான பைக்கை ஸ்போர்ட்ஸ் பைக்காக மாற்றியதுதான் இவரது முதல் பணியாக இருந்தது. அதன்பிறகு பழைய பைக் மற்றும் பழைய இரும்புகளைக் கொண்டு குட்டி ஜீப்பை உருவாக்கினார். இப்படியே, தொடர்ந்து கொண்டிருக்கின்றன ராகேஷின் புதிய கண்டுபிடிப்புகள்.