செய்திகள்

பழவேற்காடு ஏரியில் வெளிநாட்டு பறவைகள் செத்து விழுந்ததால் பரபரப்பு

தண்ணீரில் ரசாயனம் கலந்ததா? என விசாரணை

திருப்பாலைவனம், பிப்.17-–

பழவேற்காடு ஏரியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து செத்தது. தண்ணீரில் ரசாயனம் கலந்ததால் அவை இறந்ததா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏரி மொத்தம் 481 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. இதில் 153 சதுர கி.மீ. தமிழக எல்லையில் உள்ளது. மற்ற பகுதி ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் 160 வகையான மீன் இனங்கள் காணப்படுகிறது.

பழவேற்காடு ஏரி பகுதியானது பறவைகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இந்தியாவில் இருந்தும், வெளிநாடு களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அறிய வகை பறவைகள் வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாக பழவேற்காடு காணப்படுகிறது.

இந்த ஏரியில் ஆக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பூநாரை, பவளகாரன், உள்ளான், பாம்புதாரா, கரண்டிலயன், நத்தைகுத்திநாரை, சாம்பல்நாரை, அரிவாள் மூக்கன், கூழைக்கடா, வர்ண நாரை, சிறிய வெள்ளை கொக்கு, உண்ணிகொக்கு, புள்ளி வாத்து, அரிய வகை ஊசிவாள் வாத்துக்கள் உள்பட பல்வேறு பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், இரை தேடியும் வந்து செல்கிறது. இந்நிலையில் அண்ணாமலைசேரி ஏரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு ஊசிவாள் வாத்துக்கள், உள்ளான் பறவைகள் அடுத்தடுத்து திடீரென மயங்கி விழுந்து செத்தது.

அரியவகை பறவைகள் செத்து கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சென்னை வட்ட வன உயிரின பாதுகாவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஏரியில் ரசாயனம் கலக்கப்பட்டதால் ஏரியில் வாழும் வெளிநாட்டு அரிய வகை உயிரினங்கள் இறந்ததா? என ஆய்வு செய்தனர்.

இதையடுத்து இறந்து கிடந்த அரிய வகை வாத்துக்களையும், ஏரி தண்ணீரையும் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் உண்மையான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பழவேற்காடு ஏரி பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *