செய்திகள்

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு: நாத்திகத் தோட்டத்தில் பூத்த ஆத்திக மலர் சேகர்பாபு

Makkal Kural Official

உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னை, ஆக.26

நாத்திகத் தோட்டத்தில் பூத்த ஆத்திக மலராக அண்ணன் சேகர்பாபு மணம் வீசி கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு பற்றி பெருமிதத்தோடு பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.

அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:–

தி.மு.க. அரசு திடீரென்று இந்த மாநாட்டை நடத்துகிறது என்று இன்றைக்கு ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்த மாநாடு திடீரென்று நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏராளமான சாதனைகளை செய்து விட்டு தான் இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.

தி.மு.க. அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது தி.மு.க. ஆட்சி தான். திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் தான் கலைஞர். இப்படி நம்முடைய தலைவர்கள் வழியில் முதலமைச்சர் அறநிலையத்துறையின் சார்பாக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திராவிட மாடல் அரசு அமைந்து, இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் 1,900 க்கும் மேற்பட்ட அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து வைத்தது முதலமைச்சர். ரூ.5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் 8,500 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு கோயில்களில் உணவு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றைக்கு நாட்டிற்கே முன்மாதிரியாக பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் 4000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் விரைவில் மதிய உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். திராவிடம் யாரையும் ஒதுக்காது, எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணத்தை அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியவர் முதலமைச்சர். அதேபோல் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மற்ற துறைகளைப் போலவே இந்து சமய அறநிலையத்துறையும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி வருகின்றது. இப்படி அடுக்கடுக்கான சாதனைகளில் எல்லாம் செய்துவிட்டு தான் சிறப்புக்குரிய இந்த மாநாட்டினை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு ஆன்மீக மாநாடாக மட்டுமல்லாமல், பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *