செய்திகள்

பழனியில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு

பழனி, மார்ச் 12–

பழனியில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரியை மக்கள் சிறைபிடித்தனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *