செய்திகள்

பழனியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு– -2024’’

ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள் – வழிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூன் 3–

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு–2024 ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் பழனியில் நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டில் முருக பக்தர்கள் பங்கேற்கவும், பேராளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகளானது தமிழ்க் கடவுள் முருகபெருமானை கருப்பொருளாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்திட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக் கட்டுரைகளுக்கான தலைப்புகள்

1. உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு,

2. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன்,

3. சங்க இலக்கியங்களில் சேயோன் மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு,

4. கல்வெட்டுகளில் முருகவேள்,

5. வேத மரபிலும், தமிழ் மரபிலும் முருக வழிபாடு,

6. சித்தர்கள் தலைவன், செந்தமிழ் முருகன்,

7. நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு,

8. சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள்,

9. வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன்,

10. முருகனும் முத்தமிழும்,

11. முருகன் அடியார்கள் பலர் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள் மற்றும் திருப்பணிகள் போன்றவை.

காளிதாசனின் குமார சம்பவம்

கீழ்க்காணும் தலைப்புகளிலும் ஆழமாக ஆய்வு செய்தும் கட்டுரைகள் வழங்கலாம்.

* முருக வழிபாட்டின் வளர்ச்சிக்கு உதவிய, வெளிச்சத்திற்கு வராத பல்வேறு அடியார்கள், நூல்கள், கலைப்படைப்புகள் குறித்த தரவுகள்.

* காளிதாசனின் குமாரசம்பவம், ஆதிசங்கரரின் சுப்ரமணிய புஜங்கம், வடமொழியில் உள்ள ஸ்காந்தம் இவற்றுடன் தமிழில் உள்ள முருக இலக்கியங்களை இணைத்து சிந்திக்கலாம்.

* சேய்தொண்டர் புராண அடியார்கள் பணி மற்றும் முருக பக்தர்களில் திருப்புகழ் பரவக் காரணமான தணிகை செங்கல்வராயனார், திருமுருக கிருபானந்த வாரியார், பித்துக்குளி முருகதாஸ், டில்லி ராகவன் குருஜீ மற்றும் பிற அடியார்கள் பணி குறித்தும் எழுதலாம்.

சாண்டோ சின்னப்பத்தேவர்

* முருகன் கோயில்களுக்கு உதவிய, பழம்பெரும் வள்ளல்கள் முதல் தற்காலத்து சாண்டோ சின்னப்பத்தேவர் வரை எழுதலாம்.

* தீவிர முருகன் தொண்டர்கள் குறித்தும் பதிவுகள் செய்யலாம்.

* கட்டுரைகள், சொற்பொழிவு போன்றவை மூலம் திருமுருகன் திருப்பணி செய்த இலக்கியவாதிகள், சமயத் தலைவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள், குமரகுருபரர், கி.வா.ஜகந்நாதன், கந்தசாமி சுவாமிகள் போன்ற பெரியோர்கள் பணிகள் குறித்து பதிவு செய்யலாம்.

* இசைக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்புகள். வள்ளித்திருமணம், காவடியாட்டங்கள், குறத்தி நடனங்கள், வேட்டுவர்கள் வெறியாட்டம் மற்றும் நுட்பமான சிற்பங்கள் இவை குறித்த செய்திகள் இருக்கலாம்.

6 பக்கங்களுக்கு மிகாமல்

ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதற்கான வழிமுறைகள்:

1. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 என்ற பொருண்மையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு முருகன் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

2. கட்டுரைகள் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும். பக்கத்தின் அளவு ஏ4 அச்சில் 1.5 வரி இடைவெளியில் எழுத்தளவு 12 ( Font Size -12) அமைதல் வேண்டும்.

3. கட்டுரைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம். கட்டுரைகள் மின்னச்சு (word file) வடிவில் இருத்தல் வேண்டும்.

4. தமிழ் யூனிக்கோடு (Unicode) எழுத்துருவிலும் ஆங்கிலம் டைம்ஸ் நியூ ரோமன் (Times New Roman) எழுத்துருவிலும் அமைதல் வேண்டும்.

5. கட்டுரையில் மேற்கோள் குறிப்புகள் சான்றெண் விளக்கம் பார்வை நூல்கள் ஆய்வு நெறிமுறைப்படி அமைதல் வேண்டும்.

6. கட்டுரையின் முன்பக்கத்தில் கட்டுரைத் தலைப்பு, கட்டுரையாளரின் பெயர் மற்றும் தகுதிப்பாடுகள் போன்ற விவரக்குறிப்புகள் அளிக்கப்பட வேண்டும். வேண்டிய விவரங்கள் – பெயர், முகவரி, எந்த நிறுவனம், கடவுச் சீட்டு எண் (Passport Number), தொடர்பு எண், இ–மெயில் முகவரி.

7. கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், புலன எண் (வாட்ஸ்அப்) மற்றும் புகைப்படம் மிக அவசியம் இடம்பெற வேண்டும்.

8. சுருக்கக்குறிப்பு மற்றும் முழுக்கட்டுரை இணையதளம் வாயிலாக வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 20.6.2024.

9. கூடுதல் விவரங்களுக்கு 94986 65116 அல்லது mmm2024palani@gmail.com மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.

தொடர்புக்கு நால்வர்

10. மேலும் தொடர்பிற்கு: முனைவர் வாசுகி – 96989 38862, முனைவர் தமிழரசி – 90950 32564, முனைவர் எஸ். கார்த்திகேயன் – 73975 21683, முனைவர் மா. மீனாட்சி சுந்தரம் – 70104 08481

11. கட்டுரைகளில் திருத்தம் செய்வதற்கு தேர்வு குழுவினருக்கு உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மட்டுமே பதிவுக்கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். இக்கட்டுரைகள் ஆய்வு மலரில் இடம்பெறும் தங்கள் கட்டுரை தேர்வு குறித்த தகவல் கட்டுரையாளர்களுக்கு 01.07.2024க்குள் தெரிவிக்கப்படும்.

ஆய்வுக் கட்டுரைகளை கட்டணமில்லாமல் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறந்த ஆய்வு கட்டுரைகள் ஆய்வு மலரில் இடம் பெறுவதுடன், பாராட்டு சான்றிதழ்களும் அளிக்கப்படும். அது மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகள் முதன்மை ஆய்வரங்கத்தில் வாசிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். எனவே ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதற்கான இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வரும் இம்மாதம் 20–ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *