சென்னை, ஜூன் 15–
பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி நடிகர் விஜய் வாழ்த்தினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவர்களை நேரில் அழைத்து தொடர்ந்து 3வது ஆண்டாக விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். இந்த விழாவில் 39 சட்டசபை தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2025ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. முதல்கட்டமாக கடந்த மே மாதம் 30–ந்தேதி 88 தொகுதி மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஜூன் 4–ந்தேதி 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன் தினம் 32 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 19 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
4வது கட்டமாக விருது
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி வாழ்த்தினார்.
இதில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் உயர்கல்வியில் சேர்ந்துள்ள பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி விஜய் கவுரவித்தார்.
முன்னதாக மாணவி ராஜேஸ்வரி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. விழாவில் விஜய் பேசுகையில், “மாணவி ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள். வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிச்சு சாதித்திருக்கிறார். அவருக்கு விஞ்ஞானி ஆகனும்னு ஆசை இருக்கிறது. கண்டிப்பா ஒருநாள் விஞ்ஞானியாக மாறுவார்” எனக் கூறி அவருக்கு பேனாவை பரிசாக வழங்கினார்.
இதையடுத்து பேசிய மாணவி ராஜேஸ்வரி, நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததை அனைவரும் பார்த்தீர்கள், நான் இந்த மேடைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. நீங்களும் என்னை போல் ஆக வேண்டுமென்றால் உங்களுக்கு உள்ள ஒரே வழி கல்வி மட்டும்தான், அதை எப்போதும் விட்டு விடாதீர்கள். விஜய் அண்ணாவை பார்க்க வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்து பெரிய கனவு. அது இன்றைக்கு நிறைவேறிவிட்டது என்று தெரிவித்தார்.