திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணியின் (ஐபிஎஃப்டி) தலைவரும் திரிபுரா அமைச்சருமான நரேந்திர சந்திர தேபர்மா, நீண்டகால உடல்நலக்குறைவால் தனது 84 வது வயதில் காலமானார். அவருக்கு குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருதை அறிவித்திருந்த நிலையில், விருது வாங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக காலமானார்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள திப்ராலாந்தில் தனி மாநிலத்திற்கான ஆயுத கிளர்ச்சி உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர், திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை தேபர்மா துவக்கினார். திரிபுரா பழங்குடி மக்கள் அதிகாரம் பெறுவதற்கான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, என்.சி தேபர்மாவின் கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றதன் அடிப்படையில் அமைச்சராக பதவி வகித்தார்.
திரிபுரா மாநிலத்தின் முக்கிய எழுத்தாளராகவும் அறிவுஜீவியுமாக விளங்கிய என்.சி.தேபர்மா ஒரு அமைச்சராகவும் தனது தகுதியை நிரூபித்தார். அகர்தலா அகில இந்திய வானொலியில் நீண்டகாலம் நிலைய இயக்குநராகப் பணிபுரிந்தார்.
மொழிக்கான வெற்றி
திரிபுரா மாநிலத்தில் வங்க மொழி மற்றும் கோக்போரோக் ஆகிய மொழிகள் பேசப்படுகிறன்றது. திரிபுராவின் அதிகாரப்பூர்வ மொழியாக கோக்பரோக்கை அங்கீகரிப்பதற்காக நரேந்திர சந்திர தேபர்மா வலுவாக வாதிட்டு வந்தார். 2018 இல் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் கோக்போரோக்கைச் சேர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
திரிபுராவில் உள்ள பழங்குடியின சமூகங்களின் நலனுக்காக பாடுபட்ட அவர், நிலம், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகிய உரிமைகளுக்காகப் போராடினார். அத்துடன் திரிபுராவில் பல கல்வி நிறுவனங்களை அமைப்பதில் நரேந்திர சந்திர தேபர்மா முக்கிய பங்கு வகித்தார். திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் கல்லூரி, திரிபுரா பல்கலைக்கழகம் மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும்.
திரிபுராவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், அரசியல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் தேபர்மா பணியாற்றினார். ஒட்டுமொத்தமாக, திரிபுராவில் உள்ள பழங்குடி சமூகங்களின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக நரேந்திர சந்திர தேபர்மா இருந்தார்.