செய்திகள் போஸ்டர் செய்தி

பள்ளி மாணவி உயிரோடு எரிப்பு: உறவுக்கார வாலிபர் உள்பட 2 பேர் கைது

Spread the love

விழுப்புரம் அருகே பயங்கரம்

பள்ளி மாணவி உயிரோடு எரிப்பு:

உறவுக்கார வாலிபர் உள்பட 2 பேர் கைது

 

சென்னை, மே.11–

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி பள்ளி மாணவி தீ வைத்து உயிரோடு எரிக்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

95% தீக்காயங்களுடன் குற்றுயிரும் குலையிருமாக இருந்தவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

நெஞ்சைப் பிளக்கும் இந்த பயங்கர சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது:–

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முருகன் மற்றும் அவரது உறவினர் யாசகம் ஆகியோர் உள்ளே நுழைந்து மாணவியின் கை கால்களை கட்டிப்போட்டு தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சென்றபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மாணவி வலியால் துடிதுடித்து அலறினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் மாணவி மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முருகன், யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய 2 பேரை நேற்று இரவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனைக்கு வந்த விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் மாணவி தனது வீட்டுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் தன்னை கட்டிப்போட்டு தன்மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *