சென்னை, மார்ச் 17-
பள்ளி மாணவிகளை அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவடி இமாகுலேட் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் எபினேசர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் கே.திவ்யா, ஆவடி நசரத் அகாடமியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோருடைய வீடியோ பதிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து, அவர்களை தலைமை செயலகத்துக்கு அழைத்துப் பேசினார்.
மாணவிகளின் கோரிக்கை
அப்போது மாணவிகள் மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்திடவும் தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளைச் செய்திடவும் கேட்டுக் கொண்டனர். மேலும் பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
அதேநேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.