நாடும் நடப்பும்

பள்ளி மாணவர்களுக்கு சட்ட அறிவு அவசியம்


ஆர்.முத்துக்குமார்


பாலியல் புகார்களும், பாதிப்படைந்த பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதும் நம் நாட்டில் மட்டும் என்று நினைப்பவர்களுக்கு சீனாவில் சமீபத்து நடப்பு புதிய விழிப்புணர்வை தருகிறது.

கோவை உக்கடம் பகுதியில் குடியிருந்த 17 வயது பிளஸ் 2 மாணவி திடீரென தூக்கில் தொங்கியபடி மரணமடைந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளிவந்தது.

தொடர்ந்து உரிய விசாரணை துவங்கிய நாளில் இதன் பின்னணியில் அவள் படித்து வந்த பள்ளியில் ஆசிரியர் கொடுத்து வந்த பாலியல் தொல்லை தான் அம்மாணவியின் முடிவுக்கு காரணம் என்பது தெரிய வர, அவரை கைது செய்யும் படலம் துவங்கி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகிறது.

2013–ல் கூட கோவை பகுதியில் பள்ளி மாணவிக்கு அநீதி இழைக்கப்பட்டது, அதன் பின்னணியில் ஒரு கல்லூரி மாணவன் இருந்தான்.

‘‘உன்னை ஆபாசமாக படம் எடுத்துள்ளேன், அதை வீட்டாருக்கும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவேன்’’ என்று பயமுறுத்தியே அவளுடன் தகாத உறவுகளை வைத்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.

தற்போது சர்வாதிகார ஆட்சி அமைப்பு கொண்ட சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் ஒருவர், டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்துவந்த சம்பவம் சர்வதேச மீடியாவில் வெளிவந்துள்ளது.

டென்னிஸ் அமைப்புகள் அவளுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வந்த நாள் முதலாய், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அவளைப் பற்றிய எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் இரு நாட்களுக்கு முன்பு ஒரு டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்று உள்ளார். அந்த நிகழ்வின் வீடியோவையும் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அப்படக்காட்சிகளில் அப்பெண் மிக சந்தோஷமாக இருப்பது போல்தான் இருக்கிறது.

ஆனால் தற்போது எழுந்துள்ள சந்தேகம், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் காட்சிகளை கொண்டு, அப்பெண் உண்மையில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாரா? ஆட்சியாளர்களின் கெடுபிடிகளால் இப்படி திடீரென போட்டியில் தோன்றி இருப்பாரோ? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

ஆக இப்படிப்பட்ட பிரச்சனைகளை உலகெங்கும் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலை மாற என்னதான் வழி?

ஒரு மாணவியோ தற்கொலையைத் தேர்வு செய்கிறார். மற்றொருவரோ தனது இன்னல்களை உலகிற்கே தெரிவித்து விட்டு தனது மனநிலையை புரிய வைத்து விட்டு, தலைமறைவாகி விடுகிறார். உலக தலைவர்களின் நிர்ப்பந்தங்களால் முகமலர்ச்சியுடன் பொது நிகழ்வில் கலந்தும் கொள்கிறார்.

நம் நாட்டில் பெண்கள் தெய்வீக சக்தியாக போற்றப்பட்டு வந்தனர், ஆனால் சமீபமாக அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் மாணவ, மாணவியரை ‘ராகிங்’ அதாவது சீனியர்கள், ஜூனியர்களை கலாட்டா செய்வது வாடிக்கை, ஒரு கட்டத்தில் மிக அநாகரீகமான செயல்களில் ஈடுபட வைத்ததால் தற்கொலை செய்து கொள்ளக் கூட நிர்ப்பந்திக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. அச்சமயத்தில் தமிழகத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்த இரும்புகர நடவடிக்கைகளால் அப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

ஆக இன்றைய பிரச்சனைகளின் பின்னணியில் பெண்கள் பாதுகாப்பும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் பின்னணியில் அவர்களது சுயமரியாதை மீது இருக்க வேண்டியது கவலையைத் தான் சுட்டிக் காட்டுகிறது

தவறு நேர்ந்தால் அது தனது வாழ்க்கையையே பாதிக்கும் என்று அஞ்சுவதை விட்டுவிட்டு அந்த சீன டென்னிஸ் வீராங்கனையை போல் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை உலகறிய அம்பலப்படுத்தலாம். அதனால் தவறு செய்தவர்களுக்குத் தான் களங்கமே தவிர அதனால் பாதிப்படைந்துள்ள பெண் மீது எந்த களங்கமும் கிடையாது அல்லவா?

இது உணர்த்தும் ஆலோசனைகள், புகார் கூறுவது எப்படி? என்பனவெல்லாம் பள்ளி வளாகங்களில் எல்லோர் கண்ணில் தெரியும்படி வைத்தாக வேண்டும்.

ஏதோ ஒருவர் தவறாக புகார் செய்து விடுவார் என்ற அச்சத்தால் உண்மையில் குற்றம் நடப்பதை தொடர விடுவது நியாயமில்லையே!

மேலும் பத்தாம் வகுப்பு வந்துவிட்ட மாணவ மாணவியருக்கு வாகன போக்குவரத்து சட்டங்கள், தனிநபர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தரும் பாடங்களை அறிமுகப்படுத்தினால் சமுதாயத்தில் தவறு செய்பவரை தட்டிக்கேட்கும் பழக்கம் சிறு வயதிலேயே வந்து விடும், அதுவே பிற்காலத்தில் சட்டங்களை முழுமையாக மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்கிட வழியாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *