செய்திகள்

பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது

Makkal Kural Official

தூத்துக்குடி, மார்ச் 10–

தூத்துக்குடியில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் செல்வதற்காக தேவேந்திரன் பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தான். அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழிமறித்து உள்ளே ஏறியது.

சரமாரியாக வெட்டு

அந்த கும்பல் பஸ்சில் இருந்த தேவேந்திரனை வெளியே இழுந்து போட்டனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் தேவேந்திரனுக்கு தலை மற்றும் கையில் வெட்டுகள் விழுந்தது. பஸ்சில் இருந்தவர்கள் சத்தம் போடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இது குறித்து பஸ்சில் வந்த சக பயணிகள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாப பிள்ளை மற்றும் போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனிடமும், அவன் படிக்கும் பள்ளியிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த தேவேந்திரனிடம் முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை நடத்தினார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மாணவனை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 17 வயதுடைய 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *