செய்திகள்

பள்ளி பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ பெயர் ‘பாரத்’ என மாறுகிறது

என்.சி.இ.ஆர்.டி. உயர் மட்டகுழு பரிந்துரை

சென்னை, அக்.26-

‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்று பள்ளி பாடப்புத்தகங்களில் மாற்றுவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அமைத்த உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.

‘இந்தியா’ என்ற பெயரை பாரத் என மாற்றுவது என்ற கருத்து கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜி–20 அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதிக்கு பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டது. அதேபோல், டெல்லியில் நடந்த ஜி–20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பாரத் என்ற பெயர் தற்போது பாடப்புத்தகங்கள் வரை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து பள்ளி பாடப்புத்தகங்களின் பாடத்திட்டத்தை திருத்தி அமைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.ஆர்.டி.) அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு தான் இந்த பரிந்துரையை அளித்து இருக்கிறது.

அதன்படி, அந்த குழு, ‘அனைத்து பாடங்களுக்கான பாடத்திட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றவும், பண்டைய வரலாறு என்பதற்கு பதிலாக பாரம்பரிய வரலாற்றை (கிளாசிக்கல் ஹிஸ்டரி) அறிமுகப்படுத்தவும், பாடத்திட்டத்தில் இந்திய அறிவு அமைப்பை (ஐ.கே.எஸ்.) அறிமுகப்படுத்தவும்’ பரிந்துரைத்து உள்ளது.

இந்த உயர்மட்டக் குழுவின் தலைவராக சி.ஐ.ஐசக் இருக்கிறார். இந்த குழுவில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ரகுவேந்திர தன்வார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் வந்தனா மிஸ்ரா, டெக்கான் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்த் ஷின்டே, அரியானா அரசு பள்ளி சமூகவியல் ஆசிரியர் மம்தா யாதவ் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவது உள்பட சிலவற்றை ஒருமனதாக பரிந்துரைத்து இருக்கின்றனர்.

இதுபற்றி அந்த குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் கூறும்போது, ‘பாரதம் என்ற பழமையான பெயர் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது நம்முடைய பாடப்புத்தகங்களில் நம்முடைய தோல்விகள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன. முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் மீதான நம்முடைய வெற்றிகள் இல்லை.

எனவே போர்களில் இந்து வெற்றிகளை முன்னிலைப்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை இருளில் காட்டியிருக்கின்றனர். எனவே இடைக்கால மற்றும் நவீன காலங்களுடன் இந்திய வரலாற்றின் பாரம்பரிய காலத்தையும் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். அனைத்து பாடங்களின் பாடத்திட்டத்திலும் இந்திய அறிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் போன்றவற்றை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்’ என்றார்.

உயர்மட்டக்குழு இந்த பரிந்துரைகள் அளித்து இருந்தாலும், குழுவின் பரிந்துரைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி. தலைவர் தினேஷ் சக்லானி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *