சென்னை, அக். 19–
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 1–ந்தேதி) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தொடர் விடுமுறை எடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வதற்காக, பண்டிகையை கொண்டாடிவிட்டு உடனடியாக இரவோடு இரவாகவே ஊர் திரும்ப வேண்டிய நிலை இருந்தது. இதனால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
9–ந்தேதி வேலை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–
இவ்வாண்டு தீபாவளியை இம்மாதம் 31–ந்தேதி அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1–ந்தேதி அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9–ந்தேதி அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 1–ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டதால், தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால், சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.