செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு 1 லட்சம் புத்தகங்களை வழங்கினார் ஸ்டாலின்

சென்னை, ஜூலை.26-

பரிசாக வந்த 1 லட்சம் புத்தகங்களை பள்ளி, கல்லூரிகளுக்கும், பக்ரைன் நாட்டு தமிழர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும், புத்தகத்தின் மேன்மையை எடுத்து சொல்லும் விதமாக, ‘காலமெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள்’ என்று சொல்லி வருகிறார். ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய பிறந்தநாளான மார்ச் 1ந்தேதி பொன்னாடை வழங்குவதற்கு பதிலாக புத்தகங்களை வழங்க தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அவர் அறிவுறுத்தியபடி, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இதுவரை மு.க.ஸ்டாலினை சந்திக்கும் போது எல்லாம் புத்தகங்களை பரிசாக வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்க அழைப்பு விடுத்தார். அவ்வாறு நிதி வழங்க மு.க.ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடை ஆகியவற்றை வழங்கினர்.

இதையடுத்து, கடந்த மே 14ந்தேதி மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குங்கள்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு, அவரை சந்திப்பவர்களும் புத்தகங்களை வழங்குகின்றனர். அந்த வகையில் நாளொன்றுக்கு இதுபோல 50 முதல் 75 புத்தகங்கள் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறாக மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கப்படும் புத்தகங்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள நூலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுகிறது. இதில் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பள்ளிகள், கல்லூரிகளுக்கு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கன்னிமாரா நூலகத்துக்கு ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், பக்ரைன் நாட்டு தமிழர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுமார் 2 ஆயிரம் புத்தகங்கள் திருச்சி சிவா எம்.பி. மூலம் கொடுத்து அனுப்பப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னை பார்க்க வருபவர்களுக்கு வேண்டுகோளாக விடுத்த மு.க.ஸ்டாலினும், சமீபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்பட முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளை சந்திக்கும் போது, புத்தகங்களை தான் பரிசாக வழங்கும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *