செய்திகள் நாடும் நடப்பும்

பள்ளித் தளம் அனைத்தும் உயர வழி என்ன?


ஆர். முத்துக்குமார்


நம் நாடெங்கும் சில பள்ளிகளின் கட்டுமானம் மிக நவீனமாகவும் ஆடம்பரமாகவும் இருப்பதால் கல்விக்கான கட்டணம் எத்தனை லட்சமாக இருந்தாலும் அதை தர தயாராக இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் வெளித்தோற்றம் பொலிவிழந்து அரூபமாக காட்சியளிக்கும் அரசு கல்விக்கூடங்களில் மாணவர் சேர்ப்பு அறவே இருப்பது இல்லை! அங்கு கல்வி கட்டணம் குறைவாக இருந்தும் கல்வி தரும் ஆசிரியர்கள் போதிய அளவு இருந்தும் அக்கட்டுமானம் உபயோகமின்றி இருப்பதால் யாருக்கும் லாபம் கிடையாது அல்லவா?

இதைப்பற்றி மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக யோசித்து சமநிலை சமுதாயம் மலர எப்படி தரமான கல்வி கட்டுமானம் வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கு கவனம் செலுத்தியாக வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளில் கண்துடைப்புக்காக மட்டும் சீர் செய்யப்பட்டு வனப்பாக இருக்க வைத்து விட்டால் மழலையர் கல்வி தரம் உயருமா?

பள்ளி அறைகளில் அனைத்து கட்டுமானமும் நவீனமாக உயர்ந்தால் தானே அடிமட்டத்தில் உள்ள பிள்ளைகள் நாளைய சுந்தர் பிச்சையாகவோ, டாடா பிர்லாவாகவோ வளரமுடியும்!

இது தேவையற்ற வீண் வாதமாகவோ, தொலைதூர கானல் நீராகவோ தான் தெரியும். உண்மை என்னவென்றால் இப்படிப்பட்ட சிறுசிறு கட்டமைப்புகள் உயர்தர கல்வி பயில்விக்கும் வளாகங்களாக உயர்ந்தால் சமுதாய மறுமலர்ச்சி உருவாகி விடும்.

பல நல்ல ஆசிரியர்கள் சொல்லித்தர தயாராக இருந்தும் ஆடம்பர கல்விக் கூடங்களில் பணியாற்ற வழியின்றி மாநில அல்லது மாநகராட்சிப் பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாக இருப்பதால் பயனற்று அல்லவா இருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வித் துறையின் மேம்பாடு என்பது மிக அடிப்படையானது. இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் கல்வி அறிவு பெற்றிருந்த மக்களின் எண்ணிக்கை 12 சதவீதம் தான். இன்று, அது 77 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தங்கள் பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. கல்வித் துறையைப் பொருத்தவரையில் அதற்கு ஒதுக்கப்படும் நிதி, கல்வி நிலையங்களின் எண்ணிக்கை, மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளிட்டவை கவனம் செலுத்தி பார்க்க வேண்டிய காரணிகள் ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 83% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 14.90 லட்சம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இவற்றில் 97 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை 26.5 கோடி.

மாநிலம் வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2.58 லட்சம் பள்ளிகள் உள்ளன. அதற்கு அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 1.25 லட்சம் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 58,801 ஆகும்.

இந்தியாவில் மொத்தம் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. அதாவது அந்த பள்ளிகளில் ஒரே ஒருஆசிரியர் மட்டும் தான் பணியில் இருப்பார். அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 16,630 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. ஆந்திராவில் 12,386 மற்றும் உத்தரபிரதேசத்தில் 8,040 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன.

2023–2024 நிதி ஆண்டில் மத்திய அரசு கல்வித்துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% அதிகம் ஆகும்.

ஆனால் கல்விதுறையை மேம்படுத்த வேண்டும் என்றால், நாட்டின் ஜிடிபியில் 6 சதவிகிதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுவரையில் இந்த அளவுக்கு மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை.

கல்விக்கான தேசிய சராசரி நிதி ஒதுக்கீடு 15.4% ஆக உள்ளது. அதாவது மாநிலங்கள் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது தேசிய சராசரிக்கு மேல் ஒதுக்கீடு செய்வது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு நடப்பு நிதி ஆண்டில் கல்விக்கு ரூ.47,266 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இன்று விதைக்கப்படும் விதையே பிற்காலத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரமாக காட்சி தரும்!

இன்றே சிறு மற்றும் மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்வி கட்டுமானங்களுக்கு புத்துயிர் தந்து அவற்றை திறம்பட செயல்படும் அமைப்பாக உயர்ந்தால் வல்லசு நாடுகளுக்கு நல்ல முன்மாதிரி நாடாக நமது தேசம் மலரும்!


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *